மலேசியா செல்ல இருந்த காத்தான்குடி இளைஞனுக்கு வவுணதீவில் நடந்த சோகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காத்தான்குடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று சனிக்கிழமை பிற்பகல் வவுணதீவு-ஆயித்தியமலை பிரதான வீதியில் பாலக்காடு சந்தியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் அதிகவேகத்துடன் உழவு இயந்திரம் ஒன்றை முந்திச்செல்ல முயன்றபோது வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாமல் வாய்க்கால் ஒன்றுகூடாக பாய்ந்து வீதிக்கல்லில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இதன்போது இருவரும் அங்கு சென்ற வவுணதீவு பொலிஸாரினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் மற்றவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் புதியகாத்தான்குடி 03ஆம் வட்டாரத்தை சேர்ந்த கே.ஆர்.எம்.ஹாரஸ்(23வயது)எனவும் படுகாயமடைந்தவர் அதே இடத்தினை சேர்ந்த முகமட் சியாம்(23வயது)எனவும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் தெரிவித்தார்.

அதிவேகமமே விபத்துக்கு காரணம் எனவும் குறித்த உயிரிழந்த இளைஞர் தொழில் நிமித்தம் நாளை மறுதினம் மலேசியாவிற்கு பயணமாகவிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.