வீடு உடைத்து கொள்ளையிட முயற்சி –முச்சக்கர வண்டிக்கும் தீவைப்பு –மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கறுவப்பங்கேணியில் உள்ள வீடு ஒன்று உடைக்கப்பட்டு கொள்ளையிட முயற்சி செய்யப்பட்டுள்ளதுடன் வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்று இன்று திங்கட்கிழமை மாலை தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இன்று மாலை 6.30மணியளவில் கறுவப்பங்கேணி விபுலானந்தா கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள இந்த நாசகார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி தீப்பிடித்து எரிவதை அயல்வீட்டார் கண்டு வீட்டு உரிமையாளருக்கு அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டு அங்கு விரைந்த தீயனைப்பு பிரிவினர் உடனடியாக அவ்விடத்திற்கு வந்து முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.

இதன் காரணமாக குறித்த வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வான் உட்பட பொருட்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

வீட்டு தீவிபத்தினை தொடர்ந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு வீட்டின் அலுமாரிக்குள் இருந்த பொருட்கள் வீசப்பட்ட நிலையில் காணப்பட்டதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

என்ன கொள்ளையிடப்பட்டுள்ளது என்பது தொடர்பில் தெரியாமல் இருப்பதாகவும் பொலிஸாரின் விசாரணையின் பின்னரே அது தெரியவரும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஸ’தலத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.