தூக்கணாம் குருவி சிறுவர் கதை நூல் வெளியீடு

நினைத்ததை நினைத்தவாறு சொல்லக்கூடிய ஆளுமைமிக்க மொழியாக தமிழ் மொழி காணப்படுவதாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் விவசாய அமைச்சரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

தமிழ் மொழிக்கு உள்ள சிறப்பு வேறு எந்த மொழிக்கும் கிடையாது எனவும் அவர் இங்கு தெரிவித்தார்.

மட்டக்களப்பினை சேர்ந்த எழுத்தாளரும் முன்பள்ளி ஆசிரியருமான திருமதி சுந்தரமதி தேவநாயகம் எழுதிய “தூக்கணாம் குருவி சிறுவர் கதை நூல்வெளியிட்டு நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.

மட்டக்களப்பு,புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு,நாவற்குடா இந்துக்கலாசார மண்டபத்தில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

கதிரவன் கலைக்கழகத்தின் தலைவர் கதிரவன் த.இன்பராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் விவசாய அமைச்சரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியா கலந்துகொண்டார்.

கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு தமிழ் சங்க காப்பாளரும் வடகிழக்கு மாகாண முன்னாள் கலாசார பணிப்பாளருமான கலா”சனம் செ.எதிர்மன்னசிங்கம்,முனைப்பு ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் மா.சசிகுமார்,களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுலத்தின் தலைவர் ப.குணசேகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நூலின் முதல் பிரதியை சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி பெற்று நூல் வெளியீட்டை ஆரம்பித்துவைத்தார்.

இந்த நிகழ்வில் நூலாசிரியர் அறிமுகவுரையினை கலைவேந்தன் மேற்கொண்டதுடன் நூல் நயவுரையினை கண்ணகி இலக்கிய கூடலின் செயலாளர் கவிஞர் அன்பழகன் குறூஸ் மேற்கொண்டதுடன் ஏற்புரையினை நூலாசிரியர் திருமதி சுந்தரமதி தேவநாயகம் நிகழ்த்தினார்.

இதன்போது நூல் உருவாக்கத்திற்கு ஆதரவு வழங்கிய உள்ளங்கள் கௌரவிக்கப்பட்டதுடன் நூலாசிரியரும் கௌரவிக்கப்பட்டார்.நிகழ்ச்சித்தொகுப்பினை அறிவிப்பாளரும் கவிஞருமான ஜி.எழில்வண்ணன் மேற்கொண்டார்.