அம்கோர் நிறுவனத்தின் காலி மாவட்டத்தில் வெள்ள நிவாரண பணிகள்

  (லியோன்)

காலி   மாவட்டத்தில் ஏற்பட்ட  வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  அம்கோர்  நிறுவனத்தினால்  வெள்ள நிவாரண  பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன 

மட்டக்களப்பைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும் அம்கோர்நிறுவனத்தினால் அண்மையில் காலி மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட  நாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 14 கிராமங்களிலுள்ள 1177 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

சுமார் 10 ஆயிரத்து 180 ரூபா  பெறுமதியான  இப்பொதிகளின் மொத்தப் பெறுமதி ஒருகோடி இருபத்தி இரண்டு இலட்சம் என்பதுடன் இப்பொதிகள் யாவும் அம்கோர் நிறுவனத்தின் உத்தியோகத்தர்களினால் நேரடியாக இப்பகுதிக்கு சென்று வழங்கப்பட்டுள்ளது

இந்த மனிதாபிமானப் பணிகளில் அம்கோர் நிறுவனத்தின் மட்டக்களப்பு ,கொழும்பு  மற்றும்  காலி  அலுவலகத்தைச்  சேர்ந்த சுமார் 15 உத்தியோகத்தர்களும்,  தொண்டர் அடிப்படையில் இணைந்த இளைஞர் யுவதிகளும் பங்கேற்றிருந்தனர்.

இனம், மதம்,  மொழிகளை  கடந்து   சேவையாற்றுவதே தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் தார்மீகக் கடமையாகும். அந்த வகையில் தேசிய அரச சார்பற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமான அம்கோர் நிறுவனமும் கடந்த காலங்களில் குறிப்பாக அனர்த்த வேளைகளில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருவதுடன் இம்முறை முதன் முதலாக தென்மாகாணத்திற்கும் தனது சேவையினை விரிவுபடுத்தியுள்ளது.

இது தொடர்பாக அம்கோர் நிறுவனத்தின் ஸ்தாபகரும் அதன் தலைவருமான ப . முரளிதரன் கருத்து தெரிவிக்கையில்  இவ்வேலைத்திட்டமானது   கிழக்கு மக்களிற்கும் தெற்கு மக்களிற்கும் ஓர் உறவுப் பாலத்தை ஏற்படுத்தும்  நோக்காக கொண்டு  எமது உத்தியோகத்தர்களுக்கு தென் பகுதி மக்களின் மாறுபட்ட வாழ்விடங்கள், வாழ்க்கை முறைகள், அவர்களது வாழ்வாதார சிரமங்கள் போன்ற விடயங்களை  நேரடியாக அறிந்து கொள்ளும் சந்தர்ப்பமாக அமைந்திருந்தது.  இவ்வாறான  செயல்பாடுகள்  மனிதாபிமானப் பணியாளர்களுக்கு மிகவும் அவசியமானது  என தெரிவித்தார்

அண்மையில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கின் போது பாதிக்கப்பட்ட மாவட்டத்தினை   பாதிக்கப்படாத  மாவட்டத்தினால் பொறுப்பேற்கும் படி அனர்த்த  முகாமைத்துவ அமைச்சினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது .


அந்த வகையில் காலி மாவட்டத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தினால் பொறுப்பேற்கப் பட்டிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.