மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பைகொட்டுவதற்கான இடைக்கால தடையை நீக்குமாறு மனு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு நிலையத்தில் திண்மக்கழிவுகள்,குப்பைகள்,மனிதக்கழிவுகள் கொட்டுவதற்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையினை நீக்குமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனு 06ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிவான்  நீதிமன்றில் சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் ஊடாக திருப்பெருந்துறை மக்களினால் குறித்த திண்மக்கழிவு நிலையத்தில் திண்மக்கழிவுகள்,மனிதக்கழிவுகள் கொட்டுவதை தடைசெய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் 14 நாட்கள் குறித்த திண்மக்கழிவு நிலையத்தில் குப்பைகள்கொட்டுவதற்கு மட்டக்களப்பு மாநகரசபைக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த தற்காலிக தடையினை நீக்குமாறு கோரி இன்று திங்கட்கிழமை சட்டத்தரணி நாராயணசாமி ஊடாக நகர்வு மனு மட்டக்களப்பு மாநகர ஆணையாளரினால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஆராய்ந்த மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவானுமான எம்.பி.இஸ்ஸடீன் எதிர்வரும் 06ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரையும் நீதிமன்றிற்கு சமூகம் தருமாறும் உத்தரவிட்டார்.

கடந்த வாரம் திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் ஏற்பட்ட தீயினால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்வுகொண்டனர்.