மட்டக்களப்பில் வைத்தியசாலையின் நிலைமை தொடர்பில் அமைச்சர் மனோகணேசன் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறுக்கு விஜயம் செய்த அமைச்சர் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையினை அபிவிருத்திசெய்வது தொடர்பில் கலந்துரையாடினார்.

பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையின்  பணிப்பாளர் டாக்டர் சூ.உதயசூரியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள்  அமைச்சர் மனோகணேசன் அதிதியாக கலந்துகொண்டார்.

நீண்ட கால வரலாற்றினைக்கொண்ட பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையினை புனரமைப்பதன் அவசியம் தொடர்பில் பிரதேச மக்கள் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான கிராம சேவையாளர் பிரிவினைக்கொண்டது எனவும் அவற்றினை இரண்டு பிரதேச செயலமாக மாற்றவேண்டும் என்றும்ஒன்று பெரியகல்லாறை தளமாக கொண்டு ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் அமைச்சிரிடம் முன்வைக்கப்பட்டது.

ஆத்துடன் மாவட்ட வைத்தியசாலையாக மிக நீண்டகாலமாக பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலை உள்ளபோதிலும் கடந்த காலத்தில்  இதனை ஆதார வைத்தியசாலையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டபோதிலும் அவை நிறைவேற்றப்படாமல்தொடர்ச்சியாக பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கிவருவதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது தனி பிரதேச செயலகம் உருவாக்குதல் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையினை தரமுயர்த்துதல் ஆகியவற்றுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக அமைச்சர் இங்கு உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள்  அமைச்சின் செயலாளர் உட்பட உயர்அதிகாரிகள்,வைத்தியர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.