மட்டக்களப்பில் பத்தாயிரம் பனைமரம் விதைப்பு

சி.தணிகசீலன்,
யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் காரணமாக இலங்கையில் மனித உயிர்கள் மாத்திரமல்லாமல் வடகிழக்கின் தாயகப் பிரதேசத்தில் தமிழர்களின் பாரம்பரிய அடையாளச் சின்னமாகக் கருதப்படும் பல மில்லியன் பனைமரங்கள் (கற்பக விருட்சம்) அழிக்கப்பட்டுள்ளன.பனைமரம் தமிழ் மக்களின் வாழ்வாதாரமாக மாத்திரமல்லாமல் இயற்கையின் அழகாகவும், அனர்த்தப் பராமரிப்பு அரணாகவும் விளங்கியது என்றே சொல்லலாம். தாயகப் பகுதிகளில் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கு பனை மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகின்றது. ஆனால், இயற்கை அனர்த்தம் தவிர்ந்து கடந்தகால யுத்தம் காரணமாக மட்டும் வடகிழக்குப் பகுதிகளில் சுமார் 4 மில்லியன் பனைமரங்கள் அழிக்கப்பட்டுள்ளன என தரவுகள் கூறுகின்றன. 

ஆயினும் எஞ்சியுள்ள பனை மரங்களையும் பாதுகாக்க முடியாத, அவற்றை மீள்நடுகை பண்ண முன்வராத ஒரு பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு தமிழ் மக்கள் எந்தவித முனைப்பும் எடுத்ததாகத் தெரியவில்லை. இந்தச் சூழலில் காணப்படும் பாாிய வெற்றிடத்தை கருத்தில் கொண்டு, எமது எதிர்காலச் சந்ததியினருக்கு வரண்ட, பாலைவனமான நிலங்களை விட்டுச் செல்லாமல் ஒரு பசுமையான தேசத்தை உருவாக்கவேண்டும்! என்கின்ற நல்ல நோக்கினை அடிப்படையாகக் கொண்டு, எமது மாவட்டத்தில், அதிக காலம் வாழக்கூடியதும், 200க்கு மேற்பட்ட வகையில் பயன்தரக்கூடியதுமான பத்தாயிரம் (10,000) பனை விதைகளை முதற்கட்டமாக நடுகின்ற செயற்திட்டத்தினை, கிழக்கிலங்கை இந்து சமய சமுக அபிவிருத்திச் சபையினர் (கி.இ..ச.ச.அ.ச), பொதுமக்கள், அரச திணைக்களங்கள் மற்றும் அமைப்புகள் என்பவற்றின் ஆதரவுடன், முதல் கட்டமாக வைபவ ரீதியாக வெல்லாவெளிப்பிரதேசத்தில் 17.09.2017 அன்று ஆரம்பித்து வைத்தனர்.


வெல்லாவெளி மாரியம்மன் ஆலய முன்றலில் இத் தொடக்கவிழாவானது ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கான அனுசரணையினை நிக் அண்ட் நெல்லி பவுண்டேசன் வழங்க, வெல்லாவெளி கமநல அபிவிருத்தி பெரும்பாக உத்தியோகத்தா் . கோ.உதயகுமாரின் ஏற்பாட்டில்,.த.துஷ்யந்தன் தலைமையில், சக்தி கமநல அமைப்பினரின் ஒருங்கிணைப்பில் இவை இனிதே இடம்பெற்றது. ஆலயத்தின் பிரதம குரு உட்பட, வைத்திய அத்தியட்சகர் .கு.சுகுணன், உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன், சூழலியலாளர் .ரமேஸ்வரன், ஆசிரியர்களான,  த.சித்தாத்தன் மற்றும்  மு.குகதாசன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான .த.சுகிர்தானந்தராசா, .க.சூரியகுமார் மற்றும் ஊடகவியலாளர்கள், சக்தி கமநல அமைப்பின் உறுப்பினர்கள், ஆலய நிர்வாகிகள், அத்துடன் கி.இ..ச.ச.அ.சபையின் உறுப்பினர்கள் தொண்டர்கள் என பலர் இதில் கலந்து சிறப்பித்தனர்.

முதல் கட்டமாக கிட்டத்தட்ட ஒரு கிலோமீற்றர் தூரமுள்ள வெல்லாவெளி பன்குள அணைக்கட்டில் இத்திட்டத்தின் முதற்படி ஆரம்பித்து வைக்கப்பட்டது. பொறியிலளாளர் திரு.ந.சிவலிங்கம், உதவி ஆணையாளர் கமநல அபிவிருத்தி திணைக்களம் மட்டக்களப்பு அவர்களின் சிபார்சிக்கும் மற்றும் ஆலோசனைக்கும் அமைவாக மட்டக்களப்பின் பிரதான வயற்காணிகளுக்கான நீர்பாச்சுகின்ற அணைக்கட்டுகள் தூர்ந்துபோகா வண்ணம் இந்த இடங்கள் தெரிவு செய்யப்பட்டு இச்செயற்திட்டம் செவ்வனே முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வுக்கு தலைமைதாங்கிய அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தரும், கி.இ..ச.ச.அ.சபையின் தலைவருமாகிய திரு.த.துஷ்யந்தன் தனதுரையில் ' எமது மக்களுக்கான தேவைகளை முன்னுரிமைப்படுத்தி தொண்டாண்மையில் பல சேவைகளை எமது சபை செய்து வருகின்றது, அந்த வகையில் கல்வி, ஆண்மீக, சுகாதாரப் பணிகளுக்கு மேலாக அங்கவீனர்களுக்கான உதவி இவற்றுடன் பசுமை உலகத்தை கட்டியெழுப்பும் உலகப் பொதுநோக்கத்தில் இணைந்தவாறு நாங்கள் பனை விருட்சங்களை உண்டுபண்ணும் பாரிய வேலையில் கால்பதித்துள்ளோம். எமது வாழ்வாதாரத்துக்கு ஆதாரமான நீரேந்து பிரதேசங்களை வெள்ள அனர்த்தம் பாதித்து வருகின்றமையை தடுப்பதற்கான ஒரு நோக்கத்தையும் இத்திட்டம் கொண்டுள்ளது' என தலைமையுரையில் தெரிவித்தார். 

இதில் கலந்துகொண்ட வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் கருத்து தெரிவிக்கையில் ' மரங்கள் மனிதன் சுவாசிப்பதற்கான நல்ல பிராணவாயுவை வெளிடுகின்றது. மரங்கள் வளர்வதனால் பல்வேறுபட்ட நன்மைகளை எமக்கு வழங்குகின்றது. அவற்றைப் பாதுகாப்பதுடன், அவற்றை நாங்கள் உருவாக்கவும் தலைப்படனும், அவற்றை எமது பிரதேசத்தில் நட இன்னொருவரை எதிர்பார்க்கும் மனநிலையை மாற்றி நாங்கள் அனைவரும் இதனை சுயமாக நடுவதற்கு முன்வரணும். அதுபோல் இந்த வரலாற்று நற்செயலில் என்னையும் அழைத்தமைக்கு நன்றி கூறக் கடமைப்பட்டதுடன், இவர்களை நான் மனமார வாழ்த்தவும் தலைப்பட்டுள்ளேன். எமது இளம் சந்ததியினர் இவற்றை உணரவேண்டும், அத்துடன் அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் முன்வந்து பங்கெடுத்து தாம் நல்லதொரு பணியை செய்தோம் என மனமகிழும் ஒரு தொண்டு மனப்பாங்கை வளர்துக்கொண்டால்தான் எமது அழிவடைந்த பிரதேசத்தினை எல்லா வகையிலும் கட்டியெழுப்பலாம்' எனக்கூறினார்.

நான் இவா்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க எனது கருத்தாக "1920 இல் 49 விகிதமாக இருந்த காட்டு வளம் 2005 இல் 26 விகிதமாக குறைவடைந்துள்ளது. இந்த நிலையில் எமது மட்டக்களப்பில் பல பனைமரங்கள் யுத்தத்தினாலும், சுனாமியினாலும் அழிவடைந்துள்ளது. இதுபோல் இந்த பனை மூலம் உற்பத்திப் பொருட்களை செய்து வந்த பெண் முயற்சியாளர்களின் வாழ்வாதாரம் அடிபட்டு விட்டது. காரணம் மரங்களை வகைதொகையின்றி அழித்திருந்தமையுடன் அடுத்து சொப்பிங், பிளாஸ்டிக் பொருட் பாவனைகளின் அதிகரிப்பு என்பனபோன்ற இன்னோரன்ன காரணிகளைச் சொல்லலாம். ஆனால் இந்த நல்லாட்சியின் கீழ் இந்த பிளாஸ்டிக் மற்றும் சொப்பிங் பை பாவனை நிறுத்தப்பட்டுள்ளதாலும், வளந்த நாடுகளில் கீழைத்தேய இயற்கைப் பொருட்கள் மூலமான உற்பத்திகளுக்கு ஏற்பட்ட கிராக்கியினாலும், இந்த பனை வளத்தினை அபிவிருத்தி செய்தல், எமது எதிர்கால சந்ததியின் பொருளாதார மீழுருவாக்கத்தின் ஒரு திறவுகோலாகவே இத்திட்டத்தினை நாங்கள் ஒரு தூரநோக்குடன் ஆரம்பித்துள்ளோம். இது எமது நிலங்களை குளிர்ச்சிப்படுத்துவதுடன், எமது மக்களின் வேலையற்றோர் விகிதத்தினையும் குறைவடையச் செய்யும். இவ்வாறான செயற்பாடுகளில் உத்தியோகத்தர்கள்தான் ஈடுபடவேண்டுமென்றில்லை, இளைஞர்கள் இவற்றில் ஆர்வத்துடன் எம்முடன் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும் எனவும் வேண்டுகின்றேன்' என குறிப்பிட்டிருந்தேன்.


கமநல அபிவிருத்தி பெரும்பாக உத்தியோகத்தர் .கோ.உதயகுமார்  ' மரங்கள் மனிதனின் நண்பன் எனவும் நாங்கள் மரங்களை நடுவதன் முக்கியத்தினை அண்மைக்காலமாக உணரத்துவங்கியுள்ளோம், எமது நீரேந்து நிலைகளில் உள்ள அணைக்கட்டுகள் மழைகாலத்தில் உடைப்பெடுப்பதனால் எமது இடங்களில் காணப்படும் வயல் நிலங்கள் எல்லாவற்றிணையும் செய்கை பண்ண முடியாமல் போகின்றது. ஆகவே இவ்வாறான காரியங்களை இவர்கள் தொண்டாண்மை அடிப்படையில் செய்ய முன்வந்ததை பாராட்டுவதுடன் இதனால் எமது நீர்நிலைகளில் நீரை அதிகமாகத் தேக்கி வைக்கும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் செயற்பாடாகவே நான் பார்க்கின்றேன்' எனக் கூறினார்.

சூழலியலாளர் செ.ரமேஸ்வரன் கூறுகையில் 'இந்த நல்ல நிகழ்வில் என்னை அழைத்தது மிக்க மகிழ்ச்சி தருகின்றது. ஏனெனில் மரம் நடுபவர்களை விட மரத்தை வெட்டுபவர்களையே அதிகம் கொண்டுள்ள சமுகத்தில், இச்செயற்பாடு எமது மக்களிடையே விழிப்பினை ஏற்படுத்துவதுடன், பனை மீழுருவாக்கம் மிக அத்தியாவசியமானது, அது எமது சூழலை பாதுகாப்பதுடன், மண்ணையும் மண்ணின் கீழ் உள்ள நீரை காய்ந்துபோகாமல் வைத்திருக்கும் ஒரு திறன் இந்தக் கற்பக தருவுக்கு இருக்கின்றதெனவும். அதனை இந்த சபையினர் முன்னெடுத்துவருவது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. இவர்களுடைய சேவை தொடரவேண்டும்' எனவும் தெரிவித்தார்.

இவ்வாறு பலு துறையினரும் இந்த திட்டத்தின் தேவைப்பாடு அதனால் விளையப்போகும் நன்மைகள் பற்றி உரையாற்றிமைக்கு மேலாக இந்த மரங்களின் முக்கியத்தினை உணர்ந்தவர்கள், அதை வெட்டாமல் இருக்க பல சட்டதிட்டங்களையும் இயற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதில் 'பனைமரங்கள் தறிப்பவர்கள் கிராம சேவை அலுவலர்,பிரதேச செயலாளரின் அனுமதி பெற்று அவற்றை தறிப்பதற்கான அங்கீகாரத்தை தம்மிடம் பெறவேண்டும் எனவும், தறிக்கும் பனைகளை எடுத்து செல்வதற்கு பாதை அனுமதி பெறவேண்டும் எனவும் பனை அபிவிருத்தி சபை அறிவித்துள்ளது. அத்துடன் தறிக்கும் ஒவ்வொரு பனை மரத்திற்கும் குறிப்பிட்ட தொகை பணம் செலுத்துதல் மற்றும் தறிக்கப்படும் ஒவ்வொரு பனை மரத்தினதும் மீள்நடுகைக்கான ஒரு தொகை பணம் செலுத்துதல் என்பன பனை அபிவிருத்தி சபையின் புதிய கட்டுப்பாடுகளாகும். 

குறித்த பனை மரங்களை நம்பி பல ஏழைக் குடும்பங்கள் வாழ்க்கை நடத்துகின்றனர். குறித்த மக்கள் தமது வருமானத்தை ஈட்டுவதற்காக பனை மரத்தில் இருந்து விழும் ஓலைகளை வெட்டி மட்டை வியாபாரம் செய்தல், பனங்கள் உற்பத்தி, பனங்கிழங்கு, ஒடியல், பனாட்டு, வினாகிரி போன்ற வருமானம் தரக்கூடிய உற்பத்தித் தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆக எமது வளத்தினை நாமே உருவாக்குவோம், கட்டிக்காப்போம், பாதுகாப்போம், ஒன்றிணைவோம்.