மட்டக்களப்பில் தொடரும் குப்பை பிரச்சினை –மட்டக்களப்பு வாவி அசுத்தமடையும் ஆபத்து

மட்டக்களப்பு மாநகரசபைக்குள் கழிவுகளை அகற்றுவதற்கு உள்ள தடைகள் காரணமாக இலங்கையின் மிகப்பெரும் வாவிகளில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு வாவி அசுத்தமடையும் நிலைக்குதள்ளப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்ப மாவட்டத்தின் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரத்தினை வாரிவழங்கும் இந்த வாவி பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதனால் இந்த நிலையேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்ப மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கழிவுகளை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக கடந்த 20 நாட்களாக மட்;டக்களப்ப மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாத நிலையே இருந்துவருகின்றது.

இதுவரை காலமும் மட்டக்களப்பு திருப்பெருந்துறை திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாநகரசபை குப்பைகளை சேகரிப்பதற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவந்தனர்.

இதன்காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை சிலர் வீடுகளிலேயே முகாமைத்துவம் செய்த நிலையில் சிலர் வீதிகளிலும் வாவிக்கரையோரங்களிலும் வீசிவருகின்றனர்.

வாவிக்கரையின் பெரும்பாலான பகுதிகளில் குப்பைகள் வீசப்படுவதன் காரணமாக மட்டக்களப்பு வாவி அசுத்தப்படுவதன் காரணமாக வாவி அசுத்தமடையும் நிலையேற்பட்டுள்ளது.

அத்துடன் வாவியில் இருந்து கடலுக்கு நீர்வெளியேறும் பகுதிகளிலும் குப்பைகள் கொட்டப்படுவதன் காரணமாக கடலில் மீன்பிடிக்கும்போது வலைகளில் குப்பைகள் சிக்குவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாணாவிட்டால் அது மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினையாக மாற்றமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு வீதிகளில் வீசப்படும் கழிவுகளை ஓரளவு அகற்றுவதற்கு மட்டக்களப்பு மாநகரசபை மேற்கொண்டுள்ள போதிலும் மாற்று இடம் இல்லாத காரணத்தினால் முழுமையாக குப்பைகள் அகற்றமுடியாத நிலையேற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை தெரிவித்துள்ளது.
சில இடங்களில் மட்டக்களப்பு மாநகரசபையுடன் இணைந்து பொதுமக்கள் குப்பைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதையும் அவதானிக்கமுடிந்தது.

மட்டக்களப்பு வாவிக்கரையோரங்கள் மற்றும் மட்டக்களப்பு வீதிகளில் அகற்றப்படும் குப்பைகள் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட வளாகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு தரம்பிரிக்கப்பட்டு ஒரு பகுதி ஏறாவூர்ப்பற்றில் உள்ள கொடுவாமடு திண்ம கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு கொண்டுசெல்லப்படுவதாக மட்டக்களப்பு மாநகரசபை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

எனினும் இதற்கு முறையான தீர்வினை காணாவிட்டால் பாரிய பிரச்சினைகளை எதிர்வரும் நாட்களில் எதிர்கொள்ளவேண்டியேற்படும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைகள் தொடர்பில் மட்டக்களப்பில் உள்ள அரசியல்வாதிகள் பாராமுகமாக இருந்துவருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குப்பைகளை கொட்டுவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் திணறிக்கொண்டுள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவாக கைகொடுக்க அரசியல்வாதிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள் எனவும் பொதுமக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.