இந்த மாத இறுதியில் கிழக்கில் ஆசிரியர் சேவையில் 1450 பட்டதாரிகள் உள்ளீர்ப்பு –கிழக்கு ஆளுனர்

நல்லாட்சியின் கீழ் இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக மாகாணமாக கிழக்கு மாகாணம் மாற்றமடைந்துள்ளதாகவும் இது சர்வதேசத்தின் கவனத்தினையும் திருப்பியுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம தெரிவித்தார்.

மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஒருவரை ஒருவர் சந்தேகம் கொண்டு நிலைமை நீக்கப்பட்டு இந்த நாட்டில் உள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் இறுதி காலப்பகுதி தற்போது வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறையில் 2015 – 2016  ஆண்டுக்கான சிறந்த சேவையாளர்களை கௌரவித்து விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று  மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது .

கிழக்குமாகாண சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2015 – 2016  ஆண்டில் கிழக்குமாகாணத்தில் உள்ள சுகாதார திணைக்களங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் சிறந்த முறையில் சேயையாற்றிய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களை  கௌரவித்து விருதுகள் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் கே .முருகானந்தன் தலைமையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணியின் பிரதான மண்டபத்தில்  நடைபெற்றது .

கடந்த 2015 – 2016  ஆண்டில் கிழக்குமாகாணத்தில் உள்ள சுகாதார திணைக்களங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற சுமார் 5500 மேற்பட்டவர்களில் சிறந்த  சேவைகளை வழங்கி   அர்ப்பணிப்புடன்  தமது கடமைகளை  புரிந்த உத்தியோகத்தர்கள்  மற்றும் ஊழியர்களில் தெரிவு செய்யப்பட 186 பேருக்கு கிழக்குமாகாண சுகாதார திணைக்களத்தினால் பாராட்டி கௌரவித்து இந்த விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது .

இந்த விருது வழங்கு நிகழ்வில் கிழக்குமாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகம , கிழக்குமாகாண  சுகாதார அமைச்சர்  மொகமட் நசீர்  மற்றும் கிழக்குமாகாண வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் , ,பொது சுகாதார பரிசோதகர்கள் , வைத்தியசாலைகள் மற்றும் திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் , ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய ஆளுனர்,

கிழக்கு மாகாணத்தில் உள்ள 1480 பட்டதாரிகள் இந்த மாதம் இறுதியில் ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்கப்படவுள்ளனர்.

கிழக்கு மாகாணம் ஒரு நல்லிணக்க மாகாணமாக முழு இலங்கைக்கும் முன்னுதாரணமாக மாகாணமாக உள்ளது.இன்று சர்வதேசத்தின் கவனத்தினையும் ஈர்த்துள்ளதுடன் அதன் ஆய்வுக்கும் இன்று கிழக்குமாகாணம் உட்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் சொல்லொன்ணா துயரங்களை எதிர்கொண்ட மாகாணங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணம் இருந்துவருகின்றது. ஒருவரையொருவர் சந்தேககண்கொண்டு பார்க்கும் நிலையிருந்துவந்தது.இன்று அந்த நிலை நீக்கப்படும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இனங்களிடையே இருந்த நம்பகத்தன்மையும் சந்தேக கண்கொண்டு பார்க்கும் நிலையே இந்த நாட்டில் பாரிய அழிவுக்கு கொண்டுசென்றது.இதன்காரணமாக தீவிரவாதமும் இனமுரண்பாடுகளும் தோற்றம்பெற்றன.

நான் வெளிவிவகார அமைச்சராக இருந்த காலத்தில் இதனை எவ்வாறு முடிவுக்கு கொண்டுவரலாம் என்பது தொடர்பில் நான் அறிக்கையொன்றினையும் சர்வதேசத்திடம் வழங்கியிருந்தேன்.இன்று இந்த நெருடிக்கடிக்கு தீர்வுகாணும் இறுதிகாலப்பகுதியில் நாங்கள் வந்துள்ளோம்.