20வது திருத்தம் மட்டுமல்ல அதன் திருத்தத்தினையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை –பிரசன்னா இந்திரகுமார்

அரசியல்யாப்பின் 20வது திருத்தம் மட்டுமல்ல.அந்த திருத்தத்தின் திருத்தம் வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என கிழக்கு மாகாணசபையின் பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் ஆதரவுடன் டான் தொலைக்காட்சி நிறுவனம் நடாத்திய மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று மாலை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு சீலாமுனை யங்ஸ்டார் விளையாட்டுக்கழகமும் கல்லடி கடல்மீன்கள் விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டது.

இதில் மட்டக்களப்பு சீலாமுனை யங்ஸ்டார் விளையாட்டுக்கழகம் 1-0 என்ற கோல்கணக்கில்வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

இதன் பரிசளிப்பு நிகழ்வு டான் தொலைக்காட்சி நிறுவன தலைவர் எஸ்.குகநாதன் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் கிழக்கு மாகாணசபை பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா உட்பட இலங்கை உதைபந்தாட்ட சங்கம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தமிழ் மக்கள் போராடிப்பெற்ற மாகாணசபையின் அதிகாரங்களை 20வது திருத்த சட்டம் ஊடாக பாராளுமன்றம் கொண்டுசென்று முடக்க எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் வன்மையாக கண்டித்து கிழக்கு மாகாணசபையில் அதற்கு எதிராக தனி நபர் பிரேரணையொன்றை கொண்டுவந்திருந்தேன்.
மாகாணசபையின் அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்ககூடாது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அனைத்து மாகாணசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை வைத்து ஒரு கபட நோக்குடன் மாகாணசபைகளை விரும்பியவேளையில் கலைப்பதற்காக அந்த திருத்ததினை கொண்டுவரநினைத்துள்ளார்கள்.இதனால் வடகிழக்கில் உள்ள சிறுபான்மை மக்களே பாதிக்கப்படுவார்கள்.

வடமாகாணசபை இதனை எதிர்த்துள்ளது.திருத்தத்தினை அனுப்பங்கள் அதனை பரிசீலிக்கின்றோம் என்று அங்குள்ள முதலமைச்சர் உட்பட உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.ஆனால் இன்னும் அங்கு திருத்தங்கள் அனுப்பபடவில்லை.இந்த தீர்மானத்தை கிழக்கு மாகாணசபை எடுக்காத காரணத்தினால் நான் சபையினைவிட்டு வெளியேறினேன். தமிழ் மக்களின் அணையினைபெற்றவர்கள் நாங்கள்.மாகாணசபையின் ஆட்சி அதிகாரங்கள் ஐந்துவருடங்கள்.அதனை நீடிப்பதானது ஜனநாயக விரோத செயற்பாடு என கூறிவெளியேறினேன்.

அரசியல்வாதிகள் மத்தியில் இன்று 20வது திருத்த சட்டம் ஒரு பட்டிமன்றம் போல் உள்ளது.அதன் நடுவர்களாக இன்று மக்கள் உள்ளனர்.அதனை ஆதரித்தவர்கள் புத்திசாலிகள் என்றும் அதனை எதிர்ப்பவர்கள் புத்தியற்றவர்கள் என்றும் என்று கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்.இதற்கான சரியான தீர்ப்பினை எதிர்காலத்தில் மக்கள் அளிக்கவேண்டும்.

அரசியல்யாப்பின் 20வது திருத்தம் மட்டுமல்ல.அந்த திருத்தத்தின் திருத்தம் வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.18மாதங்களுக்குள் மாகாணசபை கலைக்கப்பட்டால் அது ஆளுனரின் கட்டுப்பாட்டின்கீழ் செல்லும். இந்த நாட்டில் வடகிழக்கில் எந்த சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்களும் ஆளுனராக வரமுடியாத நிலையிருக்கின்றது.கடந்த காலத்தில் வடகிழக்கில் ஆளுனராக இருந்தவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.அதன்காரணமாகவே 20வது திருத்ததினை எதிர்க்கின்றோம்.