உள்ளீர்ப்பதற்கான அமைச்சரவை தீர்மானத்தை துரிதப்படுத்துமாறு பட்டதாரிகள் கோரிக்கை

வேலையற்ற பட்டதாரிகளை அரச சேவைக்குள் பயிற்சி அடிப்படையில் உள்ளீர்ப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளமைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள வேலையற்ற பட்டதாரிகள்,குறித்த தீர்மானத்தை விரைவில் நடைமுறைப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் இன்று வியாழக்கிழமையுடன் 150 நாட்களை கடந்துள்ள நிலையில் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை வரவேற்பதாகவும் அதற்கான நடவடிக்கையினை மேற்கொண்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பட்டதாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 150வது நாளாகவும் இன்று வியாழக்கிழமையும் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடைபெற்றுவருகின்றது.

இந்த நிலையில் வடமாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவந்த போராட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து சத்தியாக்கிரக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

தமக்கான உறுதியான உறுதிமொழிகள் வழங்கப்படும் வரையில் தமது போராட்டம் முன்கொண்டுசெல்லப்படும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த காலத்தில் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட நிலையில் அவை நிறைவேற்றப்படாத நிலையே இருந்துவந்ததாகவும் அதன் காரணமாக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் உறுதியான வாக்குறுதி வழங்கப்படும் வரையில் தமது போராட்டம் முன்கொண்டுசெல்லப்படும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்துள்ளார்.

எனினும் தமது நிலைகண்டு ஜனாதிபதியும் பிரதமரும் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறித்த உள்ளீர்ப்பினை விரைவுபடுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.