மட்டக்களப்பு இரு இளைஞர்கள் காணமல்போன சம்பவம் - அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு –நஸ்ட ஈடும் வழங்க உத்தரவு

மட்டக்களப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில், அவர்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2007ம் ஆண்டு ஒக்டோபர் 3ம் திகதி மட்டக்களப்பு பொலிஸாரால் தமிழ் இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக பொலிஸாரால் கூறப்பட்டது. இந்தநிலையில், அவர்கள் காணாமல் போயுள்ளதாகவும், எனவே, அவர்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும் கோரி, மட்டக்களப்பை சேர்ந்த செல்வராஜா புஸ்பராணி மற்றும் அண்ணாமலை செல்வராஜா ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த பிரதம நீதியரசர் பிரசாத் டெப் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், மனுதாரர்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், அதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் தீர்ப்பளித்தனர்.

இதன்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தால் 10 இலட்சம் ரூபா நஸ்டஈடாக வழங்கப்பட வேண்டும் என நீதியரசர்கள் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், இதற்கு மேலதிகமாக, அப்போதைய மட்டக்களப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பீ,எஸ்.விக்ரமரத்ன, தனது சொந்த நிதியில் இருந்து மனுதாரர்களுக்கு 50,000 ரூபாவை இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.