கள்ளுத்தவறணைக்கான அனுமதியை இரத்துச்செய்யுமாறு கோரி களுவாஞ்சிகுடியில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட எருவில் கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கள்ளுத்தவறனை அமைக்கப்படுவதற்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய எருவில் கிராம மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போதையற்ற நாட்டை உருவாக்கப்போவதாக ஜனாதிபதி தெரிவித்துவரும் நிலையில் இவ்வாறான கள்ளுத்தவறனை போன்ற மது விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்குவது யார் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கேள்வியெழுப்பினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான மதுபான உற்பத்தி சாலைகள் காணப்படுவதன் காரணமாக எதிர்காலத்தில் எந்த மதுபான விற்பனை நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான கள்ளுத்தவறணைகளுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்படுகின்றது எனவும் பொதுமக்கள் கேள்வியெழுப்பினர்.

எருவில் பகுதியில் கடந்த காலத்தில் மதுபான பாவனை காரணமாக அதிகமான இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் மதுபான பாவனை காரணமாக அதிகளவான குற்றச்செயல்களும் இடம்பெறுவதாகவும் இதனை தடுப்பதற்கு கிராம மட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இவ்வாறு கள்ளுத்தவறணைகளை திறப்பது எதிர்காலத்தில் பாரிய சீரழிவுகளை ஏற்படுத்தும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

“போதையற்ற உலகை உருவாக்குவோம்”, “வேண்டாம் மது,நிராகரிக்கின்றோம் எமது கிராமத்தில் உருவாகும் கள்ளுத்தவறணையை”, “சமூக சீர்கேட்டை இல்லாது ஒழித்து போதையற்ற சமூகத்தினை உருவாக்குவோம்”,எமது கிராமத்தில் கள்ளுத்தவறணை வேண்டாம் போன்ற பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை குறித்த கள்ளுத்தவறணை தொடர்பில் முறையாக வர்த்தமானி அறிவித்தல் வழங்கப்பட்டு குறித்த தவறணைக்கு அனுமதி வழங்கப்பட்;டுள்ளதாகவும் அது தொடர்பில் பொதுமக்கள் எதிர்ப்பதன் காரணமாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தெரிவித்தார்.

முறையான வகையில் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த கள்ளுத்தவறணைக்கு எதிராக பொதுமக்கள் எதிர்;ப்பு தெரிவிப்பதன் காரணமாக மதுவரித்திணைக்கள ஆணையாளர் நாயகம் உட்பட உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும் எனவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இதன்போது குறித்த கள்ளுத்தவறணையின் அனுமதியை ரத்துச்செய்யுமாறு கோரி ஜனாதிபதி மற்றும் உயர் அதிகாரிகளுக்கான மகஜர்களும் பிரதேச செயலாளரிடம் வழங்கப்பட்டது.