கிழக்கு மாகாண புதிய ஆளுனர் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும்

புதிதாக கடமையேற்றுள்ள கிழக்கு மாகாணசபையின் ஆளுனர் தமது பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்துசெயற்படமுன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 149வது நாளாகவும் தொடர்ச்சியாக தமது போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையிலும் தமக்கான தீர்வுகள் எதுவும் இதுவரையில் வழங்கப்படவில்லையெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 149வது நாளாகவும் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக தமது சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமக்கான தொழில் உரிமையினை வலியுறுத்தி மேற்கொண்டுவரும் இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளபோதிலும் உறுதியான உறுதிமொழிகள் எதுவும் இதுவரையில் வழங்கப்படவில்லையென பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் மத்திய மாகாண அரசாங்கங்களினாலும் அரசியல்வாதிகளினாலும் நாங்கள் ஏமாற்றப்படுகின்றோமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த நாட்டின் கற்ற சமூகம் ஒன்று வீதியில் படுத்துறங்கி போராடுவதை இந்த நாட்டில் உள்ள அரசாங்கங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வேதனையான விடயம் எனவும் பட்டதாரிகள் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாணத்தில் புதிதாக கடமையேற்றுள்ள ஆளுனராவது எமது பிரச்சினையினை ஆராய்ந்து அதற்கு முன்னுரிமை கொடுத்து இந்த பிரச்சினையை தீர்த்துவைக்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கையினை இந்த சந்தர்ப்பத்தில் விடுப்பதாகவும் பட்டதாரிகள் தெரிவித்தனர்.