வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்வு

(லியோன்)


வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு ஊர்வலம்,  வீதி நாடகமும் மற்றும் துண்டுபிரசுரங்களும்  விநியோக நிகழ்வும் மட்டக்களப்பு பஸ் நிலையத்துக்கு முன்பாக  (03) காலை  நடைபெற்றது .
 

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தின் ஒழுங்கமைப்பில்  வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய ,தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் எஸ் . ரத்னஜீவன் எச் ஹீல் மற்றும்  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி .எஸ் .எம் .. தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

மட்டக்களப்பு மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமான ஊர்வலம் மட்டக்களப்பு  பிரதான வீதி ஊடாக மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை நடைபெற்றது .

'எங்கள் வாக்கு எங்கள் எதிர்காலம்'  வாக்காளர்களே ஜுன் மாதம் வாக்காளர் உரிமைகளைப் பதிவு செய்து உறுதிப்படுத்தும் மாதம்' உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஊர்வலத்தில் தாங்கியிருந்தனர்.

இதன் பிரதான நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது .

நடைபெற்ற ஊர்வலம் மற்றும் நடைபெற்ற பிரதான நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் உதவி ஆணையாளர் ஆர்.சசீலன் உட்பட தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள், மாவட்டச் செயலக அதிகாரிகள்,  பிரதேச செயலாளர்கள் ,கிராம சேவையாளர்கள் , பொலிஸ் அதிகாரிகள் மற்றும்  ஆர்வலர்கள் பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள்  என பலர் கலந்துகொண்டனர்.
 
இந்நிகழ்வில் வாக்காளர் உரிமையை வலியுறுத்தும் வகையில்   விழிப்புணர்வு நாடகமும் விஷேட உரைகளும் இடம்பெற்றன