மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதி மக்களின் பிரச்சினையை தீர்க்க களமிறங்கியுள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமாக கருதப்படும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதியான புனாணை மேற்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதி மக்கள் பல காலமாக எதிர்நோக்கிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புனாணை மேற்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட நான்கு கிராமங்களின் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

புனாணை மேற்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட மயிலந்தனை,சாளம்பச்சேனை,அணைக்கட்டு,முள்ளியவட்டை ஆகிய கிராமங்களில் 230க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல்வேறு கஸ்டங்களுடன் வாழந்துவருகின்றனர்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இந்த கிராமங்களில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று காலை கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின் ஏற்பாட்டில் மயிலந்தனை சனசமூக நிலையில் இப்பகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான விசேட நடமாடும் சேவை நடாத்தப்பட்டது.

இதில் மட்டக்களப்ப மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் க.சித்திரவேல்,கிரான் பிரதேச செயலாளர் எஸ்.தனபாலசுந்தரம்,ஓட்டமாவடி பிரதேசசபையின் செயலாளர் ஜே.சர்வேஸ்வரன்,பிரதேச பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,கிராம சேவையாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதன்போது குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

1990ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரங்கள் காரணமாக இப்பகுதியில் இருந்த மக்கள் இடம்பெயர்ந்து வாழைச்சேனை,கிரான்,சித்தாண்டி பகுதிகளில் வசித்துவந்த நிலையில் தொடர்ச்சியான யுத்தம் காரணமாக தமது சொந்த இடங்களுக்கு செல்லமுடியாத நிலையே இருந்துவந்தது.

இந்த நிலையில் 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இப்பகுதியில் உள்ள மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பல்வேறு கஸ்டங்களுடனேயே வசித்துவந்தனர்.எனினும் தொடர்ச்சியாக இப்பகுதி மக்களின் தேவைகள் குறித்து அரசியல்வாதிகளோ,அரச அதிகாரிகளே அக்கரைகொள்ளாத நிலையே இருந்துவந்தது.அத்துடன் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஒரு சில அபிவிருத்தி நடவடிக்கைகளும் முறையாக செய்யப்படாமல் அவை தூர்ந்துபோன நிலையிலேயே காணப்படுகின்றது.

இந்த கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியின் ஒரு பகுதி புனரமைக்கப்பட்டுள்ளபோதிலும் அந்த பாதை பயன்படுத்தமுடியாத நிலையில் மிக மோசமான முறையில் காணப்படுகின்றது.அத்துடன் ஏனைய வீதிகளும் காணப்படுகின்றன.

குறித்த கிராம மக்கள் குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதாகவும் ஓட்டமாவடி பிரதேசசபையினால் சில தினங்களுக்கு நீர் வழங்கப்படுகின்றபோதிலும் அது தமக்கு போதாமை காணப்படுவதாகவும் அதன் காரணமாக தூரத்தில் உள்ள குளத்திற்கு சென்று நீரைப்பெற்றுக்கொள்ளும் நிலையிருப்பதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன் யானைகளின் பிரச்சினை தொடர்ச்சியாக இருப்பதாகவும் மாலைவேளையில் போக்குவரத்து செய்வதற்கு முடியாத நிலையிருப்பதாகவும் வீதி விளக்குகள் பொருத்தாத காரணத்தினால் மாலை வேளையில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் இப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டினார்.

இப்பகுதி இளைஞர்கள் விளையாடுவதற்கு ஒரு விளையாட்டுக்கழகம் கூட இல்லையெனவும் ஒரு விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படவேண்டும் எனவும் அப்பகுதி மக்களினால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

குறித்த பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட மாகாணசபை உறுப்பினர் கருணாகரம் மற்றும் அதிகாரிகள் உடனடியாக குடிநீர்ப்பிரச்சினையை தீர்க்கும் வகையில் புதிய நீர்த்தாங்கிகளை வழங்குவதாகவும் குடிநீர்ப்பிரச்சினைக்கு ஒரு வருடத்திற்குள் தீர்வு வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.அத்துடன் நாளைய தினமே குறித்த பகுதிகளில் உள்ள வீதிகளுக்கு மின்குமிழ்கள் பொருத்த ஏற்பாடுசெய்வதாகவும் வீதிகளை செப்பனிடுவதற்கான நிதிகளைப்பெற்று புனரமைத்து தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.

வாழ்வாதார உதவிக்கான ஏற்பாடுகள்,யானை வேலிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதேச செயலாளரின் இங்கு உறுதியளிக்கப்பட்டதுடன் இப்பகுதிகளில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
அத்துடன் இளைஞர்களின் விளையாட்டு மைதானத்தினை உடனடியாக அமைப்பதற்கான வேலைகளும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கருணகரமினால் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இதன்போது பொதுமக்களும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கருணகரம், மட்டக்களப்ப மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் க.சித்திரவேல், பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.