ஜனாதிபதியின் பங்குபற்றலுடன் இளைஞர் கொடி விற்பனை ஆரம்பம்.

(சசி துறையூர்) சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஜுலை 26ம் திகதி இளைஞர் கொடிதினமாக பிரகடணப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களுக்கு  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்/பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி எறந்த வெலியங்கே அவர்களினால் உத்தியோக பூர்வமாக முதலாவது கொடி அணிவிக்கப்பட்டது, இந்த நிகழ்வில் தேசிய இளைஞர் கழக சம்மேளன நிருவாகிகள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்  அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 இதனைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில்  (26.07.2017) புதன்கிழமை பிரதேச செயலக பிரிவுகள் தோறும் உத்தியோக பூர்வமாக கொடி அணிவித்தல் நிகழ்வு இடம் பெற்று கொடிவிற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தினை பிரதேச இளைஞர்சேவை அதிகாரிகளின் வழிகாட்டல் ஆலோசனையின் கீழ் பிரதேச மட்டத்தில் பிரதேச இளைஞர் கழக சம்மேளனமும்,கிராம மட்டத்தில் இளைஞர் கழகங்களும் உற்சாகமாக முன்னெடுக்கவுள்ளன.

ஜூலை மாதம் 24ஆம் திகதி தொடக்கம் ஜுலை 30ம் திகதி வரை கொடி விற்பனை  செய்து இளைஞர் அபிவிருத்திக்காக நிதி சேகரிப்பது இதன் நோக்கமாகும். இதன்கீழ் இளைஞர் கழகங்களினால் இனங் காணப்பட்ட பொருத்தமான சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

மேலும் கொடி விற்பனை மூலம் தேசிய ரீதியில் அதிகளவான நிதி திரட்டும் இளைஞர் கழகங்கள், பிரதேச சம்மேளனங்கள், மாவட்ட சம்மேளனங்களுக்கு பணப்பரிசில்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.