News Update :
Home » » கதிர்காமம் முருகனாலயக் கொடியேற்றம்.

கதிர்காமம் முருகனாலயக் கொடியேற்றம்.

Penulis : Nithakaran Maruthy on Sunday, July 16, 2017 | 5:22 PM

இலங்கைத் திருநாட்டின் தென்பகுதியில்   ஊவா மாகாண பிரதேசத்தில், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கதிர்காமத்தலம்  மாணிக்க கங்கைக் கரையோரமாக அமைந்துள்ள ஒரு புனித ஸ்தலமாகும்.   கதிர்காமம். கதிர் என்றால் சூரியன் என்றும் காமம் என்றால் அன்பு என்றும் இதனால் சூரியனின் அன்பு நிறைந்த இடம் என்று குறிப்பிடுகின்றனர். இன்னும் சிலர் கதிர் என்றால் திணை காமம் என்றால் கிராமம் என்றும் இதனால். திணை கிராமம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

கதிர்காமம் முருகனாலயக் கொடியேற்றம் எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறுமென கதிர்காம பஸ்நாயக்க நிலமே வி.ரி.குமாரகே தெரிவித்தார்.
தீர்ததோற்சவம் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடைபெறுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பல்லின மக்களின் சங்கமமாக அன்றைக்கும் இன்றைக்கும் விளங்கிக் கொண்டிருக்கிறது இலங்கையின் கதிர்காம முருகன் ஆலயம்.
சிங்கள மொழி இலக்கியமான ‘ஸ்கந்தஉபாத’ என்கிற நூலில் தமிழரசனான எல்லாளனை வெல்வதற்கு துட்டகைமுனு மன்னனுக்கு கதிர்காமக் கடவுள் அருள் செய்ததாகச் சொல்லப் பட்டிருக்கிறது. இலங்கை வரலாறு பேசும் சிங்கள இலக்கியமான மகாவம்சமும் கதிர்காமத்தை சிறப்பித்துச் சொல்கிறது. இவற்றின் காரணமாக, இன்றைக்கும் கதிர்காமம் பௌத்தமத ஆலய பரிபாலன சட்டத்தின் கீழேயே நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது.
ஆனாலும், இலங்கையில் வாழும் தமிழ் இந்துக்கள் தங்களின் தனிப்பெருங்கடவுளாக கதிர்காம கந்தப்பெருமானை கருதுகிறார்கள். கந்தபுராணத்திலுள்ள ஏமகூடப் படலத்தில் இந்தக் கதிர்காமச் சிறப்புச் சொல்லப் பட்டிருக்கின்றமையும், இன்னும் அருணகிரிநாதரால் திருப்புகழ்கள் பாடப் பெற்றிருப்பதும் இன்ன பிறவும் இந்த பற்றுக்கும் பக்திக்கும் முக்கிய காரணமாகும்.
தொல்காப்பியம் பேசும் கந்தழி வணக்க முறையான வாய்கட்டி வழிபாடு செய்யும் முறைமை இன்று வரை கதிர்காமத்தில் இருப்பதைச் சுட்டிக் காட்டும் தமிழறிஞர்கள் திருமுருகாற்றுப்படை பேசும் ஐந்தாம் படை வீடும் கதிர்காமமே என்று குறிப்பிடுகிறார்கள்.
இவற்றின் காரணமாக, 1908ஆம் ஆண்டு முதலாக தமிழ் இந்துக்கள் தம்மிடம் இக்கோவிலை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து வந்தார்கள் என்றாலும், அவைகள் எவையும் சாத்தியமாகவில்லை.
இன்றைக்கு கப்புறாளைமார் என்கிற சிங்கள இனத்தவர்களே வாய்கட்டி திரைக்குப் பின்னால் முருகனுக்கு இங்கு பூஜை செய்கிறார்கள். இதனை விட அதிசயம் என்ன என்றால் இங்கே திரைக்குப் பின் ஒரு பெட்டிக்கு வழிபாடு நடக்கிறது. பெட்டியில் இருப்பது என்ன என்று இது வரை பரமரஹஸ்யமாகவே இருக்கிறது.
ஆனால், இவ்வகை வழிபாடுகளுக்கு அப்பால் இன்றைக்கும் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், அடியழித்தல், தேங்காய் உடைத்தல், தீ மிதித்தல், முள்ளு மிதியடி என்று இந்து மத வணக்க முறைகள் அங்கே பல்லின மக்களாலும் விருப்போடு ஆற்றப்பெற்று வருகின்றன. ஆங்கே ஒரு மலையிலிருந்து கிடைக்கும் வெள்ளைக் கட்டிகள் (திருமண் போன்றது) திருநீறு என்று கதிர்காமம் வரும் பல்லின மக்களாலும் பக்தியுடன் அணியப்படுகிறது.
சிங்கள மக்கள் ‘கதிரகம தெய்யோ’ என்று வழிபட்டு வருகின்றார்கள். இவற்றினை தடுக்க இயலாதவர்களாக பௌத்த குருமார்களே இவற்றைச் செய்வதற்கு தம் மத மக்களுக்கு ஆசி வழங்க வேண்டிய நிலையிலிருக்கிறார்கள் என்றால் கதிரையாண்டவனின் ஆலயத்தின் பேரில் மக்களுக்குள்ள நம்பிக்கையின் வெளிப்பாட்டின் அதியுச்ச பக்தியினை  வெளிக்காட்டுகின்றது.
அங்கே வாழும் பழங்குடிகளான வேடுவர்களுக்கும் முருகன் பேரில் அலாதி பக்தி இருக்கிறது. தங்கள் மாப்பிள்ளைக் கடவுள் என்று கந்தனைப் போற்றுகிறார்கள். வள்ளி திருமணம் நடந்த இடம் கதிர்காமம் என்று இவர்கள் நம்புகிறார்கள்.
இப்படியே சிங்கள, தமிழ் மக்களின் நம்பிக்கையும் இருக்கிறது. இலங்கையின் இருமொழி இலக்கியங்களிலும் கதிர்காம வள்ளி கல்யாணம் பற்றிய கதைகளைக் காணலாம்.
முருகனின் நாயகியும் தேவேந்திரனின் திருமகளுமான தெய்வானை வள்ளியோடு இங்கு தங்கி விட்ட கந்தக்கடவுளை மீட்டுச் செல்ல முயன்றதாயும், ஆனாலும் அந்த முயற்சி தோற்றுப் போகவே அவளும் இங்கேயே தனிக்கோயில் கொண்டு விட்டதாகவும் இப்போதைய ஐதீகக் கதைகள் சிலவும் உள்ளன.
இறைவன் குமரனின் மலைக்கு அருகில் வள்ளி மலை இருக்கிறது. அங்கே வள்ளியம்மை கோயிலும் உள்ளது. தனியே தேவசேனா கோயிலும் உள்ளது. என்றாலும் வள்ளியம்மைக்கே எல்லாவிடத்தும் முதன்மையும் சிறப்பும் தரப்படுவது அவதானிக்கத் தக்கது.
ஆரம்ப காலத்தில் கதிர்காமத்தில் ஆகம பூர்வமான வழிபாடுகள் சில நடைபெற்றது என்பதும் இந்துக்கள் சிலரின் நம்பிக்கை. எனினும் இன்றைக்கு கதிர்காமத்தில் அவற்றிற்கு எல்லாம் இடமே இல்லாமல் போன பிறகு தமிழ் இந்துக்கள் அதிகம் செறிந்து வாழும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் கதிர்காம ஆலயங்கள் தோற்றம் பெற்றுள்ளன. அங்கெல்லாம் கதிர்காம மரபிலான வழிபாடுகள் கொஞ்சம் சிவாகமச் சார்பு பெற்று தமிழியற் செழுமையோடு ஆற்றப்பெற்று வருகின்றன.
எவை எப்படி இருப்பினும் முருகப்பெருமான் அங்கு வீற்றிருக்கின்றார். இவற்றிற்கெல்லாம் பின்னால் பெரிய இரகசியம் ஒன்றுண்டு. பெரும் சித்தர் திருமூலர் “உனுடம்பு ஆலயம்...என்று குறிப்பிட்ட நிலையை அடைந்த சித்தர்களின் பின்னணி அங்குண்டு. போகர்மாமகரிசி பழனியில் இறைவனால் பழனி ஆண்டவனை நவபாசாணத்தில் உருவாக்க பணித்தபோது மகரி ஐவரை கதிர்காமம் அனுப்பி அவர்களை இங்கு நிஸ்டையில் ஆளும்படி பணித்தார். அப்போது அவர் இங்கிருந்து சக்தியை ஈர்த்தும் நவகோள்களில் உள்ள பாசாணத்தை ஈர்த்தும் தான் பழனி முருகனின் திருவுருவை முடித்தார் என்றும் முன்னோர் கூறுகின்றனர். அது மட்டும்மல்ல போகர்மகரிசியும் பல சித்தருடன் வந்தாகவும் அப்போது களைப்பால் பால்குடிக்க வெளிக்கிட்டபோது அருணகிரிநாதரை காணவில்லை என தேடியபோது போது கிளி வடிவில் வந்த அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியதாகவும் பின் அக்கிளிக் கூட்டை விட்டதாகவும் அதை பின்னர் திருகோணமலையில் உள்ள கன்னியா உற்றுக்கு மேலே உள்ள மலையில் சமாதி வைத்ததாகவும். செவிவழிக்கதையொன்று உண்டு. எது எவ்வாறு இருந்தாலும் சித்தர்கள் வாழ்ந்ததற்கான சான்றாக இருப்பது
தெய்வானை அம்மன் ஆலயத்துக்கு முன்னால் உள்ள குருபீடமும் எட்டு சமாதிகளும் அதன் வரலாற்றை நான் அறிந்த வகையில் பார்போம்.கதிர்காம வரலாற்றில் எல்லோரலும் "முத்துலிங்க சுவாமி" என அழைக்கப்பட்ட கிரியானகிரி சுவாமிகள் முக்கியமானவர். மகரிசி போகரால்
அனுப்பபட்ட முத்துலிங்க சுவாமி தனது சக்கியை முழுமையாகப்பயன்படுத்தி ஒரு முருகனின் யந்திரம் வரைந்து அதற்கு சக்தியுட்டி மீண்டும் பழனிக்கு எடுத்துச்செல்ல விளைந்த போது குறவல்லி தடுத்து அதை கதிர்காமத்தில் வைத்தபோது முருகனால்  தடுக்கமுடியாமையினால் எம்பெருமான் அவ்விடத்திலேயே தங்கிவிட்டதாகவும் அவரைக்காணத் தெய்வானை தேடிவந்தபோது சம்பவம் அறிந்து கோபம் கொண்டு முருகனின் கோயிலுக்கு புறமுதுகுகாட்டி இருந்ததாகவும் கதிர்காம சரித்திரம் கூறுகின்றது.தற்போது தெய்வானை அம்மன் ஆலயம் அப்படித்தான் அமைந்துள்ளது. இவ்வாலயத்துக்கு முன்னால் குருபீடமும் எட்டு சமாதிகளும் இருக்கின்றது.
இற்றைக்கு இருநூறு வருடங்களுக்கு முன் எல்லோரலும் முத்துலிங்க சுவாமி என அழைக்கப்பட்ட கிரியானகிரி சுவாமிகள் வடஇந்தியாவில் இருந்து கதிகாமம் நோக்கி வந்தார். இவர் முருகப்பெருமானே துணை என இங்கு வந்த தவசிரேடர். இவர் இங்கு வந்து முருகனின் யந்திரம் வரைந்து அதில் முருகப்பெருமானை அடக்கி தவத்தில் ஈடுபட்டார். அவர் உருவாக்கிய யந்திரமே இன்றும் அங்கு இருப்பதுடன் பெரகராவில் யானை மீது வைத்து வலம் வருகின்றனர். கிரியானரி சுவாமிகளின் சமாதி சிவன்கோயிலின்னுள் உள்ளது.இவ்வாறாக உற்சவ காலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் கதிர்காம முருகப்பெருமானை மனமுருக வேண்டி வழிபட்டு வருவதனை காணலாம்.

Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger