தமிழீழ விடுதலை மக்கள் கழகத்தின் 28வது வீரமக்கள் நினைவுதினம்

தமிழீழ விடுதலை மக்கள் கழகத்தின் (புளோட்) செயலாளர் நாயகம் க.உமாமகேஸ்வரன் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் அ.அமிர்தலிங்கம் ஆகியோர் படுகொலைசெய்யப்பட்டதை நினைவுகூரும் 28வது ஆண்டு வீரமக்கள் நினைவு தினம் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலை மக்கள் கழகத்தின் உபதலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு சனிக்கிழமை மட்டக்களப்பு தாண்டவன்வெளியில் உள்ள கூட்டுறவு நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழீழ விடுதலை மக்கள் கழகத்தின் (புளோட் கட்சி)செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டார்.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,இரா.துரைரெட்னம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது தமிழீழ விடுதலை மக்கள் கழகத்தின் (புளோட்) செயலாளர் நாயகம் க.உமாமகேஸ்வரன் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் அ.அமிர்தலிங்கம் உட்பட உயிரிழந்த கழக போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு மலரஞ்சலி செய்யப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் மாகாணசபை உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர்.