வரலாற்றில் முதன்முறையாக விபுலானந்தர் ஆவணப்படம் வெளியிட்டுவைப்பு

உலகத்தமிழர்களினதும்,இலங்கைத் தமிழர்களின் அடையாளச் சின்னமாகவும்,இருப்பாகவும் திகழ்ந்தவர்தான் உயர்பண்பாளர் சுவாமி விபுலானந்தர்."உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது "எனும் பாடல்மூலம் மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை சேர்த்தவர் விபுலானந்தர் ஆவார்.

இவரின் வாழ்க்கை வரலாற்றையும்,கல்விச்செயற்பாட்டையும்,இவரது நல்லிணக்கத்தையும் வைத்துக்கொண்டு  அரங்கம் நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் முதலாவது ஆவணப்படம் நேற்று வியாழக்கிழமைவு இரவு வெளியிட்டு வைக்கப்பட்டது.

ஆரம்ப காலத்திலேயே, இலங்கையில் தமிழ்,இசை,சமயம்,விஞ்ஞானம்,அறிவியல்,பல மொழிகளென பல்துறைகளிலும் ஆளுமை பெற்ற ஒரு தமிழ் மகான் வாழ்ந்துள்ளார் என்பது தமிழ் சமூகத்துக்கே பெருமை சேர்க்கும் விடயமாகும்.

அப்படிப்பட்ட ஒருவரின் ஆளுமை,திறமை மற்றும் அரும்பணிகள் பற்றி ஒவ்வொரு தமிழரும் அறிந்து வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். ஆனால் உண்மையைச் சொல்வதாக இருந்தால், இந்த அவசர உலகில் நாமாக ஆசைபட்டாலும்கூட விபுலானந்தர் பற்றிய புத்தகங்களைத் தேடி எடுத்து வாசிக்க எமக்கு நேரம் கிடைப்பதில்லை.

இதனை நன்கு புரிந்து கொண்டவர்களாக, காலத்துக்கு ஏற்ற வகையில் விபுலானந்தரை மக்களிடம் கொண்டு செல்லும் அணுகுமுறையை 'அரங்கம்' நிறுவனத்தார் முன்னெடுத்துள்ளனர்.

அதன் வெளிப்பாடாகவுருவாகியுள்ள விபுலானந்தர் ஆவணப்படம் நேற்று மாமாலை மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் வைத்துவெளியிட்டுவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு ,பெரியபுல்லுமலையை சேர்ந்தவரும் கனடாவில் வசித்துவருபவருமான சமூக சேவையாளர் பாபு வசந்தகுமாரின் எண்ணக்கருவில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படத்தினை சிரேஸ்ட ஊடகவியலாளரும் பி.பி.சி.செய்திச்சேவையின் செய்தி ஆசிரியருமான சீவகன் பூபாலரட்னம் மேற்பார்வைசெய்துள்ளார்.

அத்துடன் அரங்கம்' நிறுவனத்தின் உறுப்பினரான திருமதி. பரமேஸ்வரி சீவகனின் முழுமையான பங்குபற்றுதலுடன் ரகுலன் சீவகனின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்திலும் சுவாமி விபுலானந்த அடிகளார் பற்றிய ஆவணப்படம் வெளிவந்துள்ளது.

நேற்று மாலை மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர்ஆலயத்தின் மஹோற்சவத்தின் ஏழாம் நாள் திருவிழாவான நல்லையா உடையார் குடும்பத்தின் உற்சவத்தினை முன்னிட்டு இந்த ஆவணப்படம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எம்.ஜெயசிங்கம்,மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா,பேராசிரியர் சி.மௌனகுரு,கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது முதல் பிரதியை பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தொழிலதிபரும் மட்டக்களப்பு தமிழ் சங்க பொருளாளருமான ரஞ்சிதமூர்த்திக்கு வழங்கி ஆவண வெளியீட்டை ஆரம்பித்துவைத்தார்.

இந்த ஆவணப்படம் லண்டன்,கனடா, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றேகால் மணித்தியாலங்களைக் கொண்டுள்ள இந்த ஆவணப்படத்தில் விபுலானந்தரின் வரலாறு விளக்கப்படுகிறது.

விபுலானந்தரை பிரதிநிதித்துவப்படுத்தும் மீள் உருவாக்கக் காட்சி இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியக் கலைஞர்கள் இந்த ஆவணத்துக்கு இசையமைத்துள்ளனர். இந்திய ஒலிப்பதிவுக் கலைஞர்களின் ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவிலும் இலங்கையிலும் விபுலானந்தரின் தமிழ் மற்றும் இசையை கற்று வரும் மாணவர்கள், அவர் காலத்தில் வாழ்ந்தவர்கள், விபுலானந்தரை குருவாக கொண்டவர்களென அனைவரதும் உரையாடல்களும் கருத்துக்களும் இந்த ஆவணத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

விபுலானந்தர் இந்தியாவில் யாழ்நூலை அரங்கேற்றிய சிதம்பரம் பல்கலைக்கழகம் மற்றும் கரந்தைத் தமிழ்ச் சங்கம் ஆகிய இடங்களுக்கும் நேரில் சென்று இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சுவாமிகளைப் பற்றிய நான்கு தலைமுறையினரின் கருத்துக்களை உள்ளடக்கியதாக இந்த ஆவணம் வெளிவந்துள்ளது.