துறைநீலாவணையில் முதலை கடித்து இறந்த நபரின் குடும்பத்திற்கு முனைப்பு ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நிதியுதவி.

(சசி துறையூர்) துறைநீலாவணை வாவியில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது முதலைக்கடிக்கு இலக்கான நிலையில் கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்த கந்தப்பன் சிவராசாவின்  தாய் மற்றும் இரு மனோநிலை பாதிக்கப்பட்ட சகோதரிகளின் எதிர்கால வாழ்வுக்காக கிராமத்து இளைஞர்களினால் ஆரம்பிக்கப்பட்ட நிதியத்துக்கு முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் அவர்களினால் ரூபா 30000.00/= நிதி உதவி வழங்கப்பட்டது.

அன்னாரி இல்லத்திற்கு நேரடியாக விஜயம் செய்து நிலமைகளை நன்காராய்ந்து முனைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் இந்த உதவியினை வழங்கியுள்ளனர்.

இவ் உதவியினை பெற்றுக்கொண்ட சிவராசாவின் தாய் கந்தப்பன் கண்ணகை மிகுந்த கவலையுடன் கண்ணீர் விட்டுக் கொண்டு எனது கணவர் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இறந்து விட்டார், அன்றிலிருந்து எனது மகன் சிவராசாதான் ஆத்துக்கு சென்று மீன்பிடித்து விற்று எனக்கும் இரண்டு பெண்பிள்ளைகளுக்கும் சோறு போட்டான் (52) ஜம்பத்திரண்டு வயதாகியும் கலியாணம் கட்டாமல் இருந்தான் இன்று அவனை கடவுள் பறித்துவிட்டார் சொல்லிக் கொண்டிருக்கும் போது மீண்டும் தாய் அழுகிறாள்.

கடந்த மாதம் மட்டக்களப்பு வாவியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது தோணியிலிருந்து வலை விரித்து மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிவராசாவின் இடது பக்க முழங்காலிற்கு கீழ் முதலையினால்
 கடித்து காயம் ஏற்பட்டு அவராகவே வீடு வந்து சேர்ந்த  நிலையில்
கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், நான்கு நாட்களின் பின் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார், அங்கு சத்திரசிகிச்சையின் மூலம் கால் முற்றாக அகற்றப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த நிலையில் மரணமடைந்தார்.

சிவராசா ஓர் அப்பாவித்தனமிக்க இளகிய மனம்கொண்டவர் தனது தந்தையை இளம் வயதிலேயே இழந்தவர்,  மூத்த சகோதர்கள் இருவரும் திருமணம் முடித்து குடும்பத்தை விட்டு பிரிந்த நிலையில் வயதான தாய் மனோநிலை பாதிக்கப்பட்ட இரண்டு சகோதரிகளையும் தனே பராமரித்து வந்துள்ளார் நாளாந்தம் மீன்பிடித்து விற்று வருகின்ற சிறிய வருமானத்தின் மூலம்.

சகோதரிகளின் நிலைகண்டு மனம்வருந்திய இவர் சகோதரிகளினால் நாளாந்தம் பல கஸ்டங்களை அனுபவித்து சகித்துக்கொண்டும், சில நாட்களில் உணவு கூட உண்ணாமல் அவர்களுக்காகவே தனது வாழ்க்கையை அர்பணித்தும் வந்துள்ளார்.

இந்த நிலையில் எழுபத்திரண்டு வயதான தாய் இந்த இரண்டு பிள்ளைகளையும் எவ்வாறு பராமரிப்பது என்று செய்வதறியாது கலங்கிப் போயுள்ளார். சுயதொழிலேதும் செய்யமுடியாத நிலை.

கிராமத்து இளைஞர்கள் ஒன்றினைந்து தாயின் பெயரில் நிரந்தர வங்கி கணக்கொன்றினை ஆரம்பித்து அதன்மூலம் பராமரிப்புக்கான செலவுகளை வழங்க திட்டமிட்டுள்ளனர். 

தாராளமனம் படைத்தவர்களிடமிருந்து இந்த தாய் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எதிர்காலத்திற்க்காக உதவுமாறு கோரப்படுகிறது.