பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்ற களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் தீர்த்தம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்கதும் மிகவும் பழமையானதும் தானாக தோன்றியதாக கருதப்படுவதுமான மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய ஆனி உத்தர தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.

வயலும் வயல்சார்ந்த இயற்கை அழகினையும் மூர்த்தி,தலம்,விருட்சம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்டு சுமார் 1000வருடங்களுக்கு முன்னர் தானாக தோற்றம்பெற்ற ஆலயமாக களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயம் விளங்கிவருகின்றது.

கடந்த புதன்கிழமை ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த அலங்கார திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றதுடன் தினமும் இரவு திருவிழா சிறப்பான முறையில் நடைபெற்றுவந்தது.

ஆலயத்தின் விசேட திருவிழாவான மாம்பழ திருவிழா மற்றும் சப்புரத்திருவிழா என்பன நேற்றும் நேற்று முன்தினமும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இன்று காலை விநாயகர் வழிபாடுகளுடன் தீர்த்தோற்சவத்திற்கான உற்சவங்கள் ஆரம்பிக்கப்பட்டு திருப்பொற்சுண்ணம் இடிக்கப்பட்டு களுதாவளைப்பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணி அருகில் உள்ள வழிபாட்டு மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமான அடியார்கள் புடைசூழ தீர்த்தக்கேணியில் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

தீர்த்தோற்சவத்தினை தொடர்ந்து ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.விநாயகமூர்த்தி குருக்களினால் திருப்பொன்னூஞ்சலி பூஜைகள் நடைபெற்றது.

இந்த உற்சவங்களில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து பல இலட்சம்பேர் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.
ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினையொட்டி களுவாஞ்சிகுடி பொலிஸாரினால் ஆலயத்தில் பொலிஸ் உப அலுவலகம் திறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.