பட்டதாரிகளை ஏமாற்றும் நடவடிக்கை எதனையும் முன்னெடுக்கவேண்டாம்

பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்குவது தொடர்பில் இதுவரையில் எதுவித வெளிப்படையான நடவடிக்கையினையும் கிழக்கு மாகாணசபை மேற்கொள்ளவில்லையென தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்,பட்டதாரிகளை ஏமாற்றும் நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 107வது நாளாகவும் இன்றும் நடைபெற்றுவருகின்றது.

தமக்கான தொழில் உரிமையினை வலியுறுத்தி காந்தி பூங்கா முன்பாக தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டமாக இதனை மேற்கொண்டுவருகின்றனர்.

இது தொடர்பில் மத்திய மாகாண அரசாங்கங்கள் பல்வேறு நடவடிக்கையினை எடுத்தபோதிலும் இதுவரையில் தமக்கான உhயி உறுதிமொழிகள் வழங்கப்படவில்லையெனவும் பட்டதாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பேராசிரியர் மாரசிங்க தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுக்குழுவொன்று அனுப்பப்பட்டு தமது பிரச்சினைகள் ஆராயப்பட்டு இரு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது.இன்று இரு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் தமக்கான எந்த உறுதியளிப்பும் நடவடிக்கையும் இதுவரை செய்யவில்லையெனவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு சிரமத்தின் மத்தியில் கற்ற சமூகம் போராடிவருவதாகவும் வேலையற்ற பட்டதாரிகளுக்கான சிறந்த தீர்வினை வழங்க அனைத்து அரசியல்வாதிகளும் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் தமக்கான நியமனம் வழங்குவது தொடர்பில் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவித்திருக்கின்றபோதிலும் இதுவரையில் வெளிப்படையான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.