தென்பகுதி மக்களுக்கு மட்டக்களப்பில் இருந்து உதவி

தென் பகுதியில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளில் மட்டக்களப்பு மக்களும் அரசார்பற்ற அமைப்புகளும் பல்கலைக்கழக மாணவர்களும் ஈடுபட்டுவருகின்றனர்.

தென் பகுதியில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் மட்டக்களப்பு மாநகரசபையும் அரசசார்பற்ற அமைப்புகளின் ஒன்றியமான இணையம் ஆகியன இணைந்து நிவாரண பொருட்களை சேகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளிலும் பொருள் சேகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு பொருட்கொள்வனவுகள் நடைபெற்றுவருகின்றன.
தென் பகுதி மக்களுக்கு உதவும் வகையில் மக்கள் தொடர்ந்து உதவிகளை வழங்கிவருகின்றனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பில் செயற்படும் அரசார்பற்ற அமைப்பான கிழக்கிலங்கை தன்னம்பிக்கை எழுச்சி நிறுவனத்தின் (ESCO)ஊடாக சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான நிவாரணப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபையில் வைத்து மாநகர ஆணையாளர் வி.தவராஜாவிடம் கிழக்கிலங்கை தன்னம்பிக்கை எழுச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.ஸ்பிறித்தியோனால் வழங்கிவைக்கப்பட்டது.