பத்து கோரிக்கையினை வலியுறுத்தி மட்டக்களப்பில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

பத்து கோரிக்கையினை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இன்று காலை கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அகில இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கமும் மட்டக்களப்பு மாவட்ட பொதுச்சுகாதார சங்கமும் இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தது.

எமது உரிமைகளை புறக்கணிக்காதே என்னும் தலைப்பில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்கள பணிமனை வரையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களத்திற்கு முன்பாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழங்கு,வழங்கு பொதுச்சுகாதார பரிசோதகர்களின் பதவி உயர்வினை வழங்கு,காட்டாதே காட்டாதே இடமாற்றத்தில் சலுகைகாட்டாதே,பொதுச்சுகாதார நிர்வாகம் வைத்தியசாலை நிர்வாகமா?,பொதுச்சுகாதார சட்டங்களை நடைமுறைப்படுத்த தடையிடாதே,கூட்டங்களில் தரக்குறைவாக பேசாதே,உணவுசட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது முட்டுக்கட்டை போடாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஏந்தியிருந்ததுடன கோசங்களையும் எழுப்பினர்.

விசேட பொதுசுகாதார பரிசோதகர்கள் நியமனங்களை வழங்குதல்,உhயி காலத்தில் மாகாண பயிற்சி நிலையத்திற்கு பொதுச்சுகாதார போதனாசிரியாகளை நிரந்தர நியமனம் செய்தல்,மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர்களுக்கான ஆறு மாதகால சேவைக்கால பயிற்சிநெறியை வழங்கவேண்டும்,ஒரேசேவை நிலையத்தில் ஐந்து வருடத்தினை பூர்த்திசெய்தவர்களை பாரபட்சமின்றி சலுகைகள் இன்றி இடமாற்றம் செய்யவேண்டும்,பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உணவு சட்டத்தினை அமுல்படுத்தும்போது எதிர்நோக்கம் நிர்வாக பிரச்சினை,அரசியல் தலையீடுகள்,வளப்பற்றாக்குறை என்பனவற்றை இல்லாமல்செய்யவேண்டும் போன்ற 10 கோரிக்கைகள் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் முன்வைக்கப்பட்டன.

தமது நியாயமான கோரிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பொதுச்சுகாதார பரிசோதகர்களின் கோரிக்கை என்பதன் காரணமாக இரண்டு வாரங்களுக்குள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு இதற்கான தீர்வினை வழங்காவிட்டால் தாய்ச்சங்கத்துடன் இணைந்து நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் இங்கு எச்சரிக்கை விடுக்கப்பட்;டது.