சிறுவர்களை பாதுகாக்குமாறு கோரி அறநெறிபாடசாலை மாணவர்கள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

சிறுவர்களை துஸ்பிரயோங்களில் இருந்து  பாதுகாக்குமாறு கோரியும் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனையினை அமுல்படுத்துமாறும் சிறுவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் மல்லிகைதீவு பகுதியில் அறநெறிப்பாடசாலைக்கு சென்ற மூன்று மாணவிகள் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள அறநெறி பாடசாலை மாணவர்கள்,ஆலயங்கள்,பொது அமைப்புகள் இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுக்குடியிருப்பு அம்பாள் அறநெறிப்பாடசாலை மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டு தமது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை கொடு’,அறநெறி சென்ற சிறுமியரை சீரழித்த காமுகர்களை தண்டி”,சிறுவர்களை பாதுகாப்போம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஏந்தியிருந்ததுடன் சிறுவர்களை பாதுகாக்குமாறு கோரி கோசங்களையும் எழுப்பினர்.

சிறுவர்கள் தமது செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ளும் வகையில் சிறுவர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என இங்கு கோரிக்கைகளை முன்வைத்த சிறுவர்கள் தமது உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்தனர்.

சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என இங்கு கோரிக்கைளை முன்வைத்த சிறுவர்கள் சிறுவர் துஸ்பிரயோகம் ஒழிக்கப்படவேண்டும் எனவுமு; கேட்டுக்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மதத்தலைவர்கள், அறநெறிப்பாடசாலை அதிபர்கள்,பொதுமக்கள் பலரும் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான கருத்துகளை தெரிவித்தனர்.