கிராமிய பாலங்களை புனரமைத்தல்



வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியடிமடு பாலம் உடைந்த நிலையில் ஒன்றரை வருடங்களுக்கு மேலாகக் காணப்படுகிறது. தற்காலிமாக அமைக்கப்பட்டுள்ள கடவையும் பொது மக்களின் பயணத்திற்கு மிகவும் ஆபத்தானதாகவுள்ளது.

 எனினும் இதன் மூலமாவே மக்கள் பயணித்து வருகின்றனர். இதனால் எதிர்வரும் மழைக்காலத்தில் இப்பிரதேச மக்கள் மிகவும் அவதியுறுவர். எனவே இவ்விடயம் தொடர்பாக 05.06.2017 அன்று திருகோணமலை கிழக்கு மாகாண சபைக்குச் சென்று  கிழக்கு மாகாணச் செயற்றிட்டப்  பொறியியலாளர் திருமதி. ந. சித்திராதேவி அவர்களுடன் கலந்துரையாடினேன். இதனையடுத்துப் செயற்றிட்டப்  பொறியியலாளர், பாலக் கட்டுமான கம்பனியின் தலைமைப் பொறியியலாளரைத் (விதானகே) தொடர்பு கொண்டு, இவ்விடயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றினை நேற்று (09.06.2017) மட்டக்களப்பு பிராந்திய உள்;ராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து மேற்படி அதிகாரிகளுடன் புளியடிமடு, மணிபுரம், பத்தர்குளம், கரடிப்பூவல் ஆகிய இடங்களுக்குக் களப்பயணம் மேற்கொள்ளப்பட்டு நிலைமை ஆராயப்பட்டது. களத்தில் மேற்கொண்ட கலந்துரையாடலின்படி புளியடிமடுப் பாலத்திற்கான வேலைகளை எதிர்வரும் வாரத்தில் ஆரம்பிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து ஒப்பந்தக்காரர் இன்று (10.06.2017) வரவழைக்கப்பட்டு பாலம் அமையவுள்ள இடம் அடையாளப்படுத்தப்பட்டது.
மேலும் கரடிப்பூவல் பால வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பத்தர் குளம் பால வேலை செய்வதற்குப் பிரதேசசபை செயலாளர், நீர்ப்பாசனப் பொறியிலாளர், பிரதேச செயலாளர், பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புகள் தேவையாகவுள்ளன. இவ்விடயத்தில் குறிப்பிட்ட பிரிவினர் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அத்துடன் ஏனைய மிகுதியாகவுள்ள பாலங்களையும் அமைக்கும் பணிகளையும் ஆரம்பிக்கவுள்ளதாக கம்பனித் தலைமைப் பொறியலாளர் உத்தரவாதம் அளித்தார். இவ்விடயத்தில் ஒத்துழைப்பு நல்கிய உள்ளுராட்சி உதவி ஆணையாளர், மாகாண உள்;ராட்சிப் செயற்றிட்டப்  பொறியியலாளர் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்தோடு ‘கிராம மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தல்’  எனும் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்திற்காக கடந்த வருடம் முன்மொழியப்பட்ட 32 கிராமியப் பாலங்களை அமைக்கின்ற செயற்பாடுகள் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சினூடாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், வக்கியல, கண்ணபுரம், கெவிளியாமடுக் கிராமங்களில் 05 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் வெளிப்படுத்தினர். மேலும் 08 பாலங்களை அமைப்பதற்கான ஆயத்த வேலைகள் செய்யப்பட்டு வருகின்றன.. அதேவேளை 09 கிராமியப் பாலங்கள் வடிவமைக்கப்டபட்டு தயார் நிலையிலுள்ளன. எனப் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.