நாங்கள் ஏமாற்றப்படுகின்றோமா என்ற சந்தேகம் நிலவுகின்றது –மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்

வேலையற்ற பட்டதாரிகள் ஏமாற்றப்படுகின்றார்களா?அல்லது ஏமாந்து நிற்கின்றார்களா என்பது புரியாத புதிராகவே இருந்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான தொழில் உரிமை கோரிய போராட்டத்தினை தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை 111வது நாளாகவும் வேலையற்ற பட்டதாரிகள் காந்திபூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்;டுவருகின்றனர்.

இந்த நிலையில் தமக்கான தொழில்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மத்திய மாகாண அரசாங்கங்கள் தெரிவிக்கின்றபோதிலும் இதுவரையில் எதுவித உறுதியான பதில்களும் வழங்கப்படவில்லையென பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் கடந்த இரண்டு வருடங்களாக உறுதிமொழியை மட்டுமே வழங்கிவருவதாகவும் உறுதியான எந்த முடிவினையும் வழங்காதது கவலையளிப்பதாகவுள்ளதாகவும் பட்டதாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இன்றைய போராட்டத்தில் அகில இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் தன்னான ஞானரத்ன தேரரும் கலந்துகொண்டார்.
வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகள் வெற்றிபெறும் வரையில் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கான தொழில் உரிமைக்கான உத்தரவாதங்கள் வழங்கப்படும் வரையில் தொடர்ச்சியாக போராட்டம் முன்கொண்டுசெல்லப்படும் எனவும் அதில் எந்த தளர்வுப்போக்கும் காட்டப்படமாட்டாது எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

தொழில் நியமனங்கள் தொடர்பில் உறுதியான நடவடிக்கை எதுவும் நடைபெறுகின்றதா என்பது புரியாத புதிராகவே உள்ளதாகவுகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமது போராட்டத்திற்கான நியாயத்தினை உணர்ந்து தொழில்களைப்பெற்றுக்கொடுப்பதற்கு அனைத்து அரசியல்வாதிகளும் கைகொடுக்கவேண்டும் எனவும் பட்டதாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.