தொண்டராசிரியர் நியமனம் தொடர்பான மத்திய கல்வியமைச்சருடனான சந்திப்பு



கிழக்கு மாகாணத் தொண்டராசிரியர் நியமனங்கள் தொடர்பாக 21.06.2017 இல் கல்வியமைச்சில் கல்வியமைச்சர்¸ அகிலவிராஜ் காரியவசம் மேலதிக செயலாளர் ஹேமந்த ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி.ஸ்ரீநேசன்¸ தௌபீக் ஆகியோர் தொண்டராசிரியப் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொண்டு¸ கலந்துரையாடலை மேற்கொண்டதாக பா.ம.உ ஜி.ஸ்ரீநேசன் ஊடகங்களுக்குத் தகவல்களை வெளியிட்டார்.

தொண்டராசிரியர் நியமனம் தொடர்பாக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் கிழக்கு மாகாணத் தொண்டராசிரியர் விடயத்திற்குப் பொருத்தமற்றிருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. அமைச்சரவைத் தீர்மானத்தின் படி 2013 ஆம் ஆண்டில் இருந்து பின்னோக்கி 03 வருடங்கள் (2013 2012 2011…….) குறையாமல் தொண்டராசிரியர்கள் பணியாற்றியிருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டிருந்தது. இவ்விடயம் கிழக்கு மாகாணத் தொண்டராசிரியர்கள் விடயத்தில் முற்றிலும் பொருத்தமற்றது என கல்வியமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருந்தோம்.

அதாவது¸ முன்னாள் கிழக்கு மாகாணக் கல்விச் செயலாளர் திரு. தியாகலிங்கம் அவர்கள் 2007 ஆம் ஆண்டில் கண்டிப்பான சுற்று நிருபம் ஒன்றினைக் கிழக்கு மாகாணத்திலுள்ள கல்வி வலயங்களுக்கும்¸ பாடசாலைகளுக்கும் அனுப்பியிருந்தார். அதன்படி¸ 2007இற்குப் பின்னர் எந்தவொரு தொண்டராசிரியரையும் பாடசாலைகளில் அனுமதிக்கக் கூடாது என சுற்று நிருபம் குறிப்பிட்டிருந்தது.

அவ்வாறு தொண்டராசிரியர்களை அனுமதித்தால்¸ அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. இதனால் பல ஆண்டுகள் பணியாற்றிய தொண்டராசிரியர்கள்¸ அவர்களது பணியார்வத்திற்கு மாறாக வெளியேற்றப்பட்டனர். எனவே 2007 இற்குப் பின்னர் தொண்டராசிரியர்கள் பணியாற்றுவதற்குத் தடையாக கிழக்கு மாகாணச் சுற்று நிருபமே காரணமாக இருந்தது என்ற விடயம் அமைச்சரிடம் வலுவாக சுட்டிக்காட்டப்பட்டது. இவ்விடயத்தினைச் செவிசாய்த்த கல்வியமைச்சர் கிழக்கு மாகாணத்தொண்டராசிரியர்களுக்கு சாதகமான முறையில் அமைச்சரவைத் தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக உத்தரவாதம் அளித்தார்.

அதேவேளை¸ கிழக்கு மாகாணத் தொண்டராசிரியர்கள் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி தம்மை பாதிக்காத விதத்தில் முறையான தீர்மானத்தை எடுத்து அதனை கல்வியமைச்சுக்கு எழுத்து மூலமாக அறிவிப்பதே பொருத்தமானதாகும். இத் தீர்மானத்தினை மக்கள் பிரதிநிதிகளாகிய எம்மிடம் வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். எனவே இவ்விடயத்தில் கிழக்குமாகாணக் கல்வியமைச்சு சார்ந்த பொறுப்புமிக்கவர்கள் தொண்டராசிரியர்கள் தொடர்பாக¸ ஒருமித்த சிந்தனையோடு மத்திய கல்வியமைச்சுக்கு முடிவினை வழங்க வேண்டியவர்களாகவுள்ளனர் வலுவான தீர்க்கமான முடிவினையே மத்திய கல்வியமைச்சு எதிர்பார்க்கின்றது. ஏற்கனவே மத்திய கல்வியமைச்சு எடுத்த முடிவில் கிழக்கு மாகாணத் தொண்டராசிரியர்கள் பற்றிய தெளிவுபடுத்தல் நேர்த்தியாக இடம் பெறவில்லை என்பது புலப்படுகின்றது. என்றும் பா.ம.உ ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்தார். இவ்விடயத்தில் கிழக்கு மாகாணத் தொண்டராசிரியர் அமைப்பின் பிரதிநிதிகள் கவனமாக இருக்கின்றார்கள் என்பதை அறிய முடிகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் முன்பு¸ 2007 ஆம் ஆண்டு காலத்தில் இருந்து உதவிக்கல்வி பணிப்பாளராகவும்¸பிரதிக்கல்விபணிப்பாளராகவும் பணியாற்றி இருந்தமையால் தொண்டராசிரியர்களின் பணிகள் சுற்றுநிருபத்தின் தாக்கம் பற்றியும் நன்கறிந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இவ்விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் திரு. இரா. சம்பந்தர் ஐயா அவர்கள் கல்வியமைச்சருடன் அடிக்கடி உரையாடி வருகின்றார்.