பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் நியமிப்பதற்கான நிதி ஒதுக்கீடு

(மண்டூர்  நிருபர்) மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சாத்வீகப் போராட்டம் இன்றுடன்(20/06/2017) 120வது நாளாக எதுவித நிரந்தர தீர்வும் எட்டப்படாத நிலையில் இடம் பெற்று வருகின்றது.

இது சம்பந்தமாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணியிடம் வினவிய போது அவர் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெருவிக்கையில் பட்டதாரிகளின் கோரிக்கை வெளிப்படையானது.நீண்ட காலமாக மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அவர்கள் தங்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.இதற்கான நடவடிக்கையை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம்.
மத்திய அரசினால் கிழக்கு மாகாணத்தில் 1700 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் நியமிப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளதுடன் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கடந்த புதன்கிழமை 259 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போது வழங்கப்பட்டுள்ள ஆளனி சுற்றறிக்கையின் பிரகாரம் 1700 பேரில் 259 பேருக்கு கொடுத்துள்ளோம்.மீதி 1441 பேருக்கு என்னென்ன பாட அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என தீர்மானித்து எமது கல்வி அமைச்சு ஆளுனருக்கு தகவல்களை அனுப்பியுள்ளது.
அவை மீண்டும் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டு அதனுடாக விண்ணப்பங்கள் கோரப்படும் என்றார்.

மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவானது மாகாண ஆளுனரின் நிர்வாகத்தின் கீழ் உள்ளதால் இவ் ஆணைக்குழுதான் மாகாணத்தின் ஆளணிக்கான விண்ணப்பங்களை கோருவதும் அதற்கான பரீட்சை நடாத்துவதுமாகும்.எனவே இதனை மிகவிரைவில் மேற்கொள்ளவேண்டும் என்பதற்கான அழுத்தங்களை கொடுத்து வருகின்றோம்.