முடிவின்றி 120நாட்களை தாண்டி தொடரும் மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

தமது தொழில் உரிமை கோரிய போராட்டம் நான்கு மாதங்களை கடந்துள்ள நிலையில் தமக்கான எதுவித நடவடிக்கைகளையும் மத்திய மாகாண அரசாங்கங்கள் எடுக்கவில்லையென மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.


மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 120வது நாளை இன்று செவ்வாய்க்கிழமை தாண்டி இடம்பெற்றுவருகின்றது.

தமது போராட்டம் நான்கு மாதங்களை இன்றுடன் கடந்துள்ள நிலையில் தமது பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை வழங்குமாறு கோரி கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

காந்தி பூங்கா முன்பாக ஒன்றுதிரண்ட வேலையற்ற  பட்டதாரிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புயனற்ற பட்டத்தினால் இனியும் அடிமைகளை உருவாக்காதே,அரசாங்கமே இன்னும் பட்டதாரிகளை படுகுழிக்குள் தள்ளாதே,இலவச கல்வியை கற்றதனால் இழிவாகி விட்டோமா?,பல்கலைக்கழகத்தில் பட்டம் வழங்குவது பாதையோரத்தில்படுக்கவா போன்ற சுலோகங்கள் தாங்கிய  பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1400க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலையற்றநிலையில் காணப்படுவதாகவும்இது தொடர்பில் உரிய தரப்பினர் இன்னும் ஏமாற்றும் செயற்பாட்டினையே மேற்கொண்டுவருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.