பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலய மகா கும்பாபிசேகம் -சிறப்புக்கட்டுரை

(வா.கிருஸ்ணகுமார்)

கிழக்கிலங்கையின் மிகவும் பழமையானதும் அற்புதங்கள் நிறைந்ததுமான மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் எதிர்வரும் திங்கட்கிழமை (29ஆம் திகதி)கோலாகலமான முறையில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அடியார்கள் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளதுடன் திங்கட்கிழமை காலை மகா கும்பாபிசேகம் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்களின் எல்லைக்கிராமமாகவும் கல்வியாறு எனவும் போற்றப்படும் ஒரு பக்கம் சமுத்திரமும் மறுபக்கம் மட்டக்களப்பு வாவியினாலும் சூழப்பெற்ற இயற்கை அழகும் கல்வி அழகும் பொருந்திய வரலாற்றுபெருமைகளைக்கொண்ட பெரியகல்லாறு கிராமத்தில் சுமார் நூறு வருடங்களுக்கு முன்பாக தோற்றம்பெற்றது பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயமாகும்.

நூறு வருடங்களுக்கு முன்னர் தற்போது ஆலயம் உள்ள பகுதி காடாக காட்சியளித்த நிலையில் அப்பகுதியில் இளைஞர்கள் சென்று விளையாடிவரும் வேளையில் ஒருநாள் சில இளைஞர்கள் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தபோது அப்பகுதியில் உள்ள ஆலம் மரத்தில் வேல் ஒன்று பாய்ந்திருப்பதையும் அங்கிருந்து இரத்தம் கசிவதையும் கண்டு அதனை அப்பகுதி பெரியவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து அங்கவந்த பெரியவர்கள் குறித்த வேலை வைத்து சிறிய பந்தல் அமைத்து வழிபட்டுவந்துள்ளனர்.அந்த ஆலயத்தில் தொடர்ச்சியான வழிபாடுகள் நடைபெற்றுவந்த நிலையில் கதிர்காமம் ஆலயத்தின் தீர்த்தோற்சவ தினத்தன்று அங்கு வந்த முதியவர் ஒருவர் வீடுவீடாக சென்று மக்களுக்கு விபுதீ வழங்கியுள்ளார்.அந்த விபூதியானது நறுமணம் கவழ்ந்த நிலையில் இருந்தாகவும் அதனைத்தொடர்து ஆலயம் உள்ள ஆலமரத்திற்கு கீழ் இருந்துள்ளார்.

அப்போது அப்பகுதி மக்கள் நீங்கள் யார் எங்கிருந்துவருகின்றீர்கள் என கேட்டுள்ளனர்.அதற்கு தான் கதிர்காமம் தீர்த்தோற்சவத்திற்கு செல்லவிருந்தாகவும் ஆனால் தன்னால் செல்லமுடியாத நிலையில்தான் இங்கேயே இருக்கப்போவதாக கூறியுள்ளார்.ஆனால் சிறிது நேரத்தில் அந்த முதியவர் அங்கிருந்து மறைந்த நிலையில் அது முருகன்தான் இங்குவந்துள்ளதாக அப்பகுதி மக்கள் நம்பியதுடன் அந்த நாளில் திருவிழாவினை நடாத்தி தீர்த்தோற்சவத்தினையும் நடாத்திவருகின்றனர்.

இவ்வாறான இந்த ஆலயமான கிராமத்தில் உள்ள விஸ்வப்பிரம்மகுல மக்களின் அயராத முயற்சிகள் காரணமாக கல் ஆலயமாக கட்டியெழுப்பப்பட்டு தொடர்ச்சியான வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் சுனாமி அனர்த்தம் காரணமாகவும் பாதிக்கப்பட்டது.

எந்த உயிர் ஆபத்துகளையும் ஏற்படுத்தாமல் அந்த முருகன்தான் தங்களைக்காப்பாற்றியதாக கருத்தும் குறித்த ஆலயம் மீது பெரியகல்லாறு மக்கள் மட்டுமன்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் மக்கள் வருகைதந்து வழிபட்டுச்செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலயத்தில் உள்ள முக்கியமான அற்புதசக்தியாக கல்வி வழங்கும் முருகனாகவும் இவர் கருதப்படுகின்றார்.தெற்கு நோக்கியதாக பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயம் அமைந்துள்ளதுடன் ஆலயத்திற்கு முன்பாக பெரியகல்லாறு மத்திய கல்லூரியும் உள்ளது.
தென்பகுதியை நோக்கி குருவாக அமர்ந்திருந்து அருளாட்சிசெய்துவரும் பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயம் மூலத்தியுடனும் இராஜகோபுரத்துடனும் அழகிய கலைநயம்கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆலயத்தின் கும்பாபிசேக கிரியைகள் இன்று வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பமானதுடன் நாளை சனிக்கிழமை காலை 9.00மணி தொடக்கம் அடியார்கள் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமையும் மாலை 5.00மணிவரையில் அடியார்கள் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறும்.

திங்கட்கிழமை காலை புனர்பூச நட்சத்திரமும் அமிர்தசித்தயோகமும் பவ கரணமும் சிங்க லக்கினமும் கூடிய முற்பகல் 10.42 மணி தொடக்கம் 12-16மணி வரையான சுபமுகூர்த்தவேளையில் மஹாகும்பாபிசேகம் சிறப்பாக நடைபெறவுள்ளது.

தெல்லப்பளை ஸ்ரீதுர்க்காதேவி வேதாகம பாடசாலையின் அதிபர் பிரதிர்ஷடா சக்கரவர்த்தி பிரதிஷ்டா சிரோண்மணி பிரம்மஸ்ரீ சுந்தர செந்தில்ராஜ சிவாச்சாரியார் தலைமையில் கிரியைகள் நடைபெறவுள்ளது.

இந்த கும்பாபிசேக நிகழ்விலும் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளும் அடியார்களுக்கான அன்னதானம் மற்றும் தாகசாந்தி ஏற்பாடுகளை பெரியகல்லாறு விஸ்வப்பிரம்ம வாலிபர்கள் சங்கமும் ஆலய பரிபாலனசபையினரும் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த கும்பாபிசேக நிகழ்விலும் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அருளாட்சியை பெற்றுச்செல்லுமாறு ஆலய பரிபாலசபையின் தலைவர் சி.பேரின்பராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.