முனைப்பினால் வீரமுனையில் சுகவீனமுற்ற குடும்பத்திற்கு மாதாந்த நிதி உதவித்திட்டம்.

(சசி துறையூர்) முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் வீரமுனை 30 வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் சுகவீனமுற்ற வறிய குடும்பத்திற்கு மாதாந்த உதவித் தொகை வழங்கல் முன்னெடுப்பு.

கண்பார்வையற்ற முதியவரையும் (81 வயது) தலையில் பல கட்டிகளையும் கொண்ட கண்பார்வை அற்ற மகளையும் (31 வயது)  பராமரிக்க முடியாமல் தெய்வானை (69 வயது) தாய் மிகுந்த கஷ்டத்தினையும் எதிர்கொண்டு வரும் அவல நிலமை முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உரிய குடும்பத்தின் வசிப்பிடத்திற்கு நேரடியாக விஜயம் செய்த முனைப்பு நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் மற்றும் நிருவாக சபை உறுப்பினர்களான ச.ரகுபதி (சுந்தரமூர்த்தி) , ரி.பிரபாகரன் ஆகியோர் நிலமையினை ஆராய்ந்ததன் அடிப்படையில் இவர்களது பராமரிப்பிற்க்காக மாதாந்தம் ஜயாயிரம் ரூபாவினை (5000.00/=) வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன்,அன்றைய தினமே (சனிக்கிழமை) முதற்கட்ட நிதி வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு தொடர்ச்சியாக மாதாந்தம் உதவித் தொகையானது வழங்குவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக தாய்
தெய்வானை கருத்து தெரிவிக்கையில் தான் நீண்டகாலமாக வயல் அறுவடை காலங்களில் களத்துக்குச் சென்று கிடைக்கும் உதவியில் இரண்டு சீவன்களையும் பராமரித்து வந்ததாகவும், கடந்த இரண்டு வருடகாலமாக இருவரையும் தனியே விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் அயலவர்களின் உதவியால் கண் தெரியாத இரண்டு சீவனும் தானும் ஒருவேளை உண்டு வருவதாகவும் கூறினார்.

இந்த நேரத்தில் முனைப்பு நிறுவனத்தினால் கிடைக்கும் மாதாந்த உதவித்தொகையானது  பெரிதும் உறுதுனையாகவும் மகிழ்ச்சியாகவும் அமைகிறது  எனவும், எனது கஷ்டத்தில் முனைப்பு ஒரு பகுதியை ஏற்றுள்ளது எனவும் அவர் நன்றி தெரிவித்தார்.