மட்டக்களப்பு நகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகள் இணைந்து ஏற்பாடுசெய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியம்,அரசசார்பற்ற அமைப்புகளின் இணைப்பான இணையம்,மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்,கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும்,பெருமளவான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் அருட்தந்தை சுவாமிநாதன் அவர்களினால் ஆத்மசாந்தி பிரார்த்தனை நடாத்தப்பட்டதுடன் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மௌன இறைவணக்கமும் செலுத்தப்பட்டது.
இதன்போது வடகிழக்கில் நடாத்தப்பட்ட இனப்படுகொலைகள், கடத்தல்கள்,காணாமல்போனவர்கள் தொடர்பில் உரிய பதில்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன் குறித்த விபரங்களை தற்போதுள்ள கூட்டாட்சி அரசு பாராளுமன்றத்தின் ஊடாக வெளியிட வேண்டும்.

இதனை யார் செய்தார்கள் என்ற விசாரணைகளுக்கு முதல் இலங்கையில் எத்தனை படுகொலைகள் நடைபெற்றுள்ளது அதில் எத்தனை இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற உண்மைகளை தற்போதுள்ள கூட்டாட்சி அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வானது திறந்தவெளியில் அரசியல்சாயம் இல்லாமல் பொது அமைப்புகள் இணைந்து நடாத்தியமை தொடர்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தினால் விசேட அறிக்கையொன்றும் விடுக்கப்பட்டது.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையை பொறுத்தமட்டில் காலத்துக்கு காலம் பல படுகொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

அரச படைகள் உட்பட நாட்டில் உள்ள பல ஆயுதக் குழுக்களினாலும் வேறு பல இனக் குழுமத்தினாலும் தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் இந்த நாட்டில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக இவ்வாறான படுகொலைகள் ஊடாக வடகிழக்கில் உள்ள தமிழர்களே இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இலங்கை சுதந்திரமடைந்து ஒரு வருட காலப்பகுதியில் – தொடக்கப்பட்ட கல்லோயா குடியேற்ற திட்டத்தின் மூலம் பழந்தமிழர் ஊரான பட்டிப்பளையில் தமிழர்களை விரட்டியடித்துவிட்டு அன்றைய காலத்தில் சிங்களவர்களுக்கு பத்தாயிரம் ரூபாக்களை வெகுமதியாக வழங்கி குடியேற்றங்களை ஊக்குவித்த அப்போதைய அரசாங்க  அதன் அடுத்த உச்சமாக 150 இற்கும் மேற்பட்ட மக்களை கொன்று 1956 இல் கல்லோயா படுகொலையை நிகழ்த்தியதாக வரலாற்று பதிவுகள் உள்ளன.

அன்று தொடக்கம் கடந்த  2009 ம் ஆண்டு  வரை வெளிப்படையான பல படுகொலைகள் வடகிழக்கு பகுதியில்  கனகச்சிதமாக அரங்கேற்றப்பட்டுள்ளன.
அவற்றில் எந்த படுகொலைக்கும் இன்று வரை நீதி வழங்கப்பட்டதாக வரலாறு இல்லை. அதனை நோக்கிய எந்த நகர்வையும் இன்றைய நல்லாட்சி அரசும் செய்யவில்லை.
1956 இலிருந்து 2008 வரை நடைபெற்ற 149 முக்கியமான படுகொலைகளை  அரசசார்பற்ற  அமைப்பு ஒன்று  ஆவணப்படுத்தியுள்ளது.

ஆனால் இலங்கை அரசாங்கமோ இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட மக்கள் வேறு நாட்டைச் சேர்ந்தவர் போன்று இவர்களது படுகொலைகள் குறித்த விசாரணைகளில் இன்றுவரை கரிசனை கொள்ளவில்லை.

இங்கு நாம் ஒரு நாட்டின் இராணுவத்தை குற்றம் சாட்டவோ அல்லது கொச்சைப்படுத்தவோ முன்வர வில்லை மாறாக ஒரு நாட்டின் பிரஜைகளை சட்டத்திற்கு புறம்பாக கொன்று குவித்த குற்றவாளிகள் மீதே நடவடிக்கை எடுக்க சொல்லுகின்றோம்.

அது இராணுவமாக இருந்தாலும் சரி அல்லது வேறு ஆயுத குழுவாக இருந்தாலும் சரி குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணை செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசின்  கடமையாகும் அதுவே ஒரு நாட்டினுடைய இறமையுமாகும்.

இதனை ஒரு அரசு செய்யாது குற்றவாளிகளை காப்பாற்ற முனையுமாக இருந்தால் குறித்த அரசே இந்த நாட்டின் இறைமையை இல்லாமல் செய்கிறது என்று அர்த்தம்.
அந்த அர்த்தத்தை திரும்ப திரும்ப தமிழ் மக்களுக்கு கற்பிக்கவே தற்போதுள்ள அரசும் முயற்சிக்கின்றது.

முள்ளிவாய்க்கால் என்பது தமிழ் மக்களை பொறுத்தவரை ஒரு வரலாறு இந்த நாட்டில் ஒரு இனத்தின் வரலாறு மட்டுமே எழுதப்பட வேண்டும் என்ற மனநிலை இனவாத சக்திகளின் உறுதியாக உள்ளன அதற்கு தீனிபோடும் வகையிலேயே நல்லாட்சி அரசும் செயற்படுகிறது.

வடகிழக்கில் பெரும்பான்மை இனமாக வாழும் தமிழ் மக்கள் தங்களது உறவுகள் கொல்லப்பட்டதை நினைத்து ஒன்று கூடி ஒப்பாரிவைக்க கூட உரிமை இல்லை என்ற நிலையை இன்றைய அரசாங்கமும் உருவாக்கியுள்ளது. அரசாங்கத்தின் இது போன்ற செயற்பாடுகள் இந்த நாட்டின் இறைமையை மீறுவதாகவே உள்ளது.

உண்மையில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்று இலங்கை அரசு கருதுமாக இருந்தால் இலங்கையில் மிகப்பெருந்தொகையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட நாளான மே 18 ஜ வடகிழக்கு மக்களின் தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்க இலங்கை அரசு ஆவண செய்வதுடன்.

கடைசி இது வரை காலமும் இலங்கையில் நடைபெற்ற படுகொலைகளின் விபரங்களையாவது அரசாங்க பாராளுமன்றத்தில் சமர்பித்து அது குறித்த விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான பிரேரணை ஒன்றை நிறைவேற்ற வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட சிவில்சமூக அமைப்புக்களாகிய நாம் கூட்டாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.

குறித்த படுகொலைகளின் பெயர் விபரங்கள் அடங்கிய விரிவான ஆவணம் ஒன்றையாவது வடகிழக்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் தயாரித்து அதனை பாராளுமன்றத்திலும் மாகாண சபையின் அமர்வுகளின் போது சமர்ப்பித்து இந்த நாட்டில் உண்மையாக எத்தனை படுகொலைகள் நடந்துள்ளது அதில் எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற உண்மையை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென வேண்கோள் விடுக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.