நல்லாட்சி தொடர்பில் நம்பிக்கையிழந்துள்ளோம் -கிழக்கு மாகாண முதலமைச்சர்

இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் சிறுபான்மை சமூகம் வைத்த நம்பிக்கை இன்று கேள்விக்குறியாகியுள்ளதாகவும் நம்பிக்கையிழந்த நிலையில் சிறுபான்மை சமூகம் உள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.

உச்சக்கட்ட அதிகார பகிர்வை இரண்டு சமூகங்களும் பெற்றுக்கொள்ளவேண்டுமானால் ஒன்றுபட்டு செயற்படவேண்டிய தேவையுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று இரு இனங்களும் இணைந்து செல்லவேண்டிய தேவையுணர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்,கடந்த காலங்களில் ஏற்பட்ட பாடங்களில் இருந்து கற்றுக்கொண்டவையினைக்கொண்டு சரியான பாதையில் பயணிக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட ஆரையம்பதியில் அமைக்கப்பட்டுள்ள பொதுநூலகம் திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் சிறப்பாக நடைபெற்றது.

கிழக்கு மாகாணசபையின் நெல்சிப் திட்டத்தின் கீழ் ஒன்றரைக்கோடி ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் சகல வசதிகளும் கொண்டதாக இந்த பொதுநூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

மண்முனைப்பற்றின் ஆரையம்பதி பிரதேசத்தில் நீண்டகால குறையாக இருந்த குறித்த பொதுநூலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் நன்மையடையவுள்ளனர்.

மாணவர்கள் பகுதி,பத்திரிகை பகுதி,நூலக பகுதி,சிறுவர்களுக்கான பகுதி,பெரியவர்களுக்கான பகுதியென சகல பிரிவினரும் நன்மைபெறும் வகையில் இந்த பொது நூலகம் இரு மாடிகளைக்கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

மண்முனைப்பற்று பிரதேசபையின் செயலாளர் ந.கிருஸ்ணபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணசபையின் பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,மா.நடராஜா,இரா.துரைரெட்னம்,சிப்லி பாரூக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது நூலகத்தின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய இரண்டு ஓய்வபெற்ற நூலகர்களும் இதன்போது கௌவரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,மா.நடராஜா,இரா.துரைரெட்னம் ஆகியோரும் உரையாற்றினர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்,

இந்த நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டபோது நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்தோம்.நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு ஒரு ஆண்டுக்குள் சரியான தீர்வுத்திட்டம் வரும் என்று எதிர்பார்த்துநின்றோம்.ஆனால் சிறுபான்மை சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது.

ஏமாற்றப்பட்டது மட்டுமன்றி சிறுபான்மை மக்களுக்கு முன்பிருந்த நம்பிக்கைகூட இழந்துவிட்டது.இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக உண்மையான அதிகாரப்பகிர்வு வருமா என்பது இன்று கேள்விக்குறியாகவுள்ளது.

முன்பிருந்த அரசாங்கத்தில் எல்லா விடயங்களும் எவ்வாறு கேள்விக்குறியானதாக இருந்ததோ அதே நிலை இன்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் நிலையேற்பட்டுள்ளது.அவற்றினை நிவர்த்திசெய்யவேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இருக்கின்றது.

நாங்கள் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளோம்.இந்தநிலையில் தமிழ்-முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட்டுசெயற்படவேண்டும் என்ற யதார்த்தத்தை நாங்கள் புரிந்துவைத்துள்ளோம்.
விட்டுக்கொடுப்புகளை செய்து அதியுட்ச அதிகாரப்பகிர்வைபெற்றுக்கொள்ளNவுண்டும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.அதில் நம்பிக்கைகொண்டு செயற்படுவதற்கான முடிவினை அரசியல் தலைவர்கள் எடுத்துள்ளார்கள்.

அதியுட்ச அதிகாரப்பகிர்வைபெற்றுக்கொள்வதற்கு இரண்டு இனங்களும் ஒற்றுமையாக செயற்படவேண்டிய தேவையுள்ளது.அவ்வாறு செயற்படும்போது உச்சபட்ச அதிகார பகிர்வினைப்பெறமுடியும்.
அதனைப்பெற்று இரண்டு சமூகங்களும் விட்டுக்கொடுப்புகளைச்செய்து அதனைபகிர்ந்துகொள்வதில் எந்த முரண்பாடுகளும் எங்களுக்குள் வராது என நாங்கள் நம்புகின்றோம்.