பாதிக்கப்பட்ட மக்களுக்கு இனமதபேதங்களுக்கு அப்பால் உதவ முன்வருமாறு பட்டதாரிகள் அழைப்பு

இனமதவேறுபாடுகள் பாராது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவமுன்வருமாறு மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தொழில் உரிமைவேண்டி காந்தி பூங்கா முன்பாக மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 100வது நாளாக இன்றும் நடைபெற்றுவருகின்றது.

இதுவரையில் எந்தவித உறுதிமொழிகளும் வழங்கப்படாத நிலையில் தொடர்ந்து வேலையற்ற பட்டதாரிகள் போராட்டங்களை நடாத்திவருகின்றனர்.

இந்த நிலையில் தெற்கில் இடம்பெற்ற அனர்த்தங்களில் உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலான நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிஷாந்த் தலைமையில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

கைகளில் மெழுகு வர்த்தியை ஏந்தியவாறு அஞ்சலி நிகழ்வுகளில் பட்டதாரிகள் பங்குபற்றியதுடன் மெழுவர்த்திகளைக்கொண்டு இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையும் செய்யப்பட்டது.

அத்துடன் அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவேண்டும் எனவும் இங்கு பிரார்த்தனைசெய்யப்பட்டது.