மாவடிமுன்மாரியில் குப்பைகொட்டும் இடத்தில் தீ –குப்பைக்க எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட விடுதிக்கல் பகுதியில் குப்பைகொட்டும் பகுதியில் ஏற்பட்ட தீயை அடுத்து அப்பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்ற மாலை மண்முனை தென் மேற்கு பிரதேசசபையினால் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படும் விடுதிக்கல் பகுதியில் பாரிய தீ பரவியதையடுத்து அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

குறித்த தீயானது இதுவரையில் கட்டுப்படுத்தப்படாத நிலையில் தொடர்ந்து எரிவதன் காரணமாக குறித்த பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் குப்பைகொட்டுவதற்கு வந்த டக்ரக்டர்களை மறித்து குப்பை கொட்டுவதை அனுமதிக்கமுடியாது என தெரிவித்தனர்.

இதன்போது குறித்த பகுதிக்குவந்த மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் செயலாளர் மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியபோதிலும் குறித்த பகுதியில் குப்பைகளை பாதுகாப்பான முறையில் கொட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் குப்பை கொட்ட அனுமதிக்கமுடியாது எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறித்த குப்பைகள் நேற்று மாலை தொடக்கம் எரிந்துவரும் நிலையில் தீயினை கட்டுப்படுத்துவதற்கு பிரதேசசபை முறையான நடவடிக்கையினை எடுக்கவில்லையெனவும் மக்கள் தெரிவிக்கின்றன,

குறித்த குப்பைகள் பாதுகாப்பற்ற வகையிலும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதவகையிலும் கொட்டப்படுதன் காரணமாக பிரதேசத்தில் உள்ள மக்கள் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த குப்பையினால் உணவினை தாங்கள் உண்ணமுடியாத நிலையில் வாழ்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அயலில் நீர்நிலைகள்,வயல்கள் உள்ளதன் காரணமாக மேல் பகுதியில் குப்பை கொட்டுவதன் காரணமாக மழை காலங்களில் நீரினால் கழுவப்பட்டு நீர் நிலைகளிலும் வயல்களிலும் கழிவுகள் சேர்வதன் காரணமாக பாரிய நெருக்கடிக்குள் உள்ளாவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பிரதேசத்தில் பாதுகாப்பற்ற வகையில் குப்பைகள் கொட்டப்படுவதன் காரணமாக அதில்இருந்து வெளியேறும் பொலித்தின் பைகளை அப்பகுதியில் உள்ள கால்நடைகள் உட்கொள்வதன் காரணமாக கால்நடைகள் இறக்கம் நிலையேற்படுவதாகவும் அப்பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் குறித்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்காக 2011ஆண்டு நிலம் குறித்த பிரதேசத்தில் வழங்கப்பட்டதாகவும் தொடர்ச்சியாக அன்று தொடக்கம் நடைபெற்றுவருவதாகவும் மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் செயலாளர் திருமதி ஜோன்பிள்ளை தெரிவித்தார்.

குறித்த பகுதியில் குப்பைகளை தரம் பிரிப்பதற்கான வேலைகள் நடைபெறுவதாகவும் அது நடைமுறைபடுத்தப்படும்போது இப்பகுதியில் குப்பை கொட்டும் நடவடிக்கைகள் சிறப்பாக முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.