அவரவர் தேவைகளுக்கு ஏற்ப இடமாற்றங்கள் வழங்குவது நிறுத்தப்படவேண்டும் -மா.நடராஜா

அவரவர் தேவைகளுக்கு ஏற்ப இடமாற்றங்கள் வழங்கப்படுவது நிறுத்தப்படவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரிக்கும் இடையிலான சிகரங்களின் சமர் கிரிக்கட் போட்டி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

 சனிக்கிழமை மாலை பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றுகையில்,

யுத்ததின் பின்னர் எமது கிராமங்கள் பல்வேறு வழிகளிலும் முன்னேறவேண்டிய தேவையுள்ளது.அந்தவகையில் இந்த பாடசாலைகளின் முயற்சிகள் வெற்றியளிக்கின்றது.

இந்த பாடசாலைகள் மென்மேலும் வளர்ச்சிப்போக்கினையடைவதற்கு மாகாணசபைகள் ஊடாகவும் பாராளுமன்றம் ஊடாகவும் முழு முயற்சிகளை எடுக்கவேண்டும்

பெரியகல்லாறு மத்திய கல்லூரி பாடசாலை ஒரு பெரிய பாடசாலையாகும். இங்கு இரண்டு விளையாட்டு உத்தியோகத்தர்கள் தேவையாகவுள்ளது.பல விளையாட்டுக்கள் இங்கிருக்கின்றன. ஒரு பெண் விளையாட்டு உத்தியோகத்தரால் முற்றுமுழுதாக இந்தப் பாடசாலையின் தேவைகளை வழங்குவது என்பது இயலாத காரியமாகும். கடந்த வருடம் முதல் இந்தப் பாடசாலைக்காக ஒரு ஆண் விளையாட்டு உத்தியோகத்தரை நியமித்துத் தரும்படி இந்தக் கிராமத்து முக்கியஸ்தர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் இங்கு கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். கல்வித் திணைக்களங்களில் இடமாற்றங்கள் மேற்கொள்கின்றபோது அந்தந்த இடத்திற்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து இடமாற்றங்களை வழங்குவதை விடுத்து அவரவர் தேவைக்கேற்ப இடமாற்றங்களை வழங்குவதை எதிர்காலத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தேவைகள் இருக்கின்ற இடத்தில் தான் அத்தேவைகளை நிவர்த்தி செய்கின்ற செயற்பாடுகள் அமைய வேண்டும். தேவைகள் இல்லாத இடத்தில் தேவையற்ற விதத்தில் சில இடமாற்றங்களை செய்வதனூடாக அந்த ஆசிரியர்களின் திறமைகள் மழுங்கடிக்கப்படுகின்றன.

இதனால் மாணவர்களின் கல்வியிலும் பாதிப்பு ஏற்படுகின்றது. அவ்வாறான ஒரு செயற்பாட்டின் காரணமாகவே இங்கு உடற்கல்வி ஆசிரியர் நியமனம்கூட நடந்திருக்கலாம். எனினும் ஒரு ஆசிரியரை நியமிப்பதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் விரைவில் அது நிறைவேறும் எனவும் கல்விப் பணிப்பாளர் கூறியிருக்கின்றார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.அடுத்தமுறை நடைபெறும் இந்த கிரிக்கட் போட்டியின்போது இரண்டு விளையாட்டு உத்தியோகத்தர்களின் முயற்சியினால் கல்லா பாடசாலை இந்த கிண்ணத்தை கைப்பற்றும் என நான் கருதுகின்றேன்.