கொக்கட்டிச்சோலையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை இராம கிருஸ்ண வித்தியாலய மாணவர்கள் இன்று திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

பாடசாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்களும் பெற்றோரும் பழைய மாணவர்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

குறித்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தவறான நடத்தையில் ஈடுபட்டதுடன் குறித்த ஆசிரியர் தொடர்பில் அதிபரிடம் முறையிடப்பட்ட நிலையில் முறையிட்ட மாணவர்களுக்கு எதிராக பல்வேறு சதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் உரிய நடவடிக்கையெடுக்காமல் தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட ஆசிரியர் சார்பாக செயற்பட்டதாகவும் மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.

குறித்த ஆசிரியரின் செயற்பாடுகள் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு தெரிவித்ததன் காரணமாக குறித்த பாடசாலையில் கற்கும் சில மாணவிகளின் புகைப்படங்களை மிக மோசமான முறையில் முகப்புத்தகங்களில் பதவிவேற்றியுள்ளதாகவும் அது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் இங்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் பட்டிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டபோதிலும் பாதிக்கப்பட்டவர்களை சுமார் ஒரு மணி நேரம் தடுத்துவைத்திருந்துவிட்டு பாதிப்புக்கு காரணமானவர்களை செல்ல அனுமதித்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

தாங்கள் தமது கல்வியை சிறந்த முறையில் பெற்றுக்கொள்ளவேண்டுமானால் குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும் பிரச்சினைக்கு காரணமான ஆசிரியர் அதனுடன் தொடர்புபட்ட மாணவினை பாடசாலையில் இருந்து நீக்கவேண்டும் எனவும் பெற்றோர் மாணவர்கள் வேண்டுகோள்விடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த மண்முனை தென் மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.தயாசீலன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதுடன் தமது கோரிக்கையினை எழுத்துமூலமாக தருமாறு கோரியதுடன் குறித்த ஆசிரியருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

எனினும் சம்பவத்துடன் தொடபுபட்டவர்களை இங்கு அழைத்துவந்து அவர்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கவேண்டும் என்ற கோரிக்கையினை விடுத்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

எனினும் அதனைத்தொடர்ந்து வலய கல்விப்பணிப்பாளருடன் தொடர்புகொண்டு கோட்டக்கல்வி அதிகாரி கலந்துரையாடி எதிர்வரும் புதன்கிழமைக்கு இடையில் ஆசிரியர் மற்றும் அதிபரின் இடமாற்றம் தொடர்பில் நடவடிக்கையெடுப்பதாக வழங்கிய உறுதிமொழியையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.