பாடுமீன்களின் சமர் கிண்ணத்தை கைப்பற்றியது மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி

(லியோன்)

மட்டக்களப்பின போர் என வர்ணிக்கப்படும்; “பாடு மீன்களின் சமர் ”  மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கும் , மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் இடையிலான  இரண்டு இன்னின்ஸ் கொண்ட கிரிக்கெட்  சமரில்  மட்டக்களப்பு மத்திய கல்லூரி  10 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று 2017 ஆண்டுக்கான பாடு மீன்களின் சமரில் சம்பியனானது .

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலைகளான மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கும் , மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும்  இடையில் இடம்பெற்ற  08 வது மாபெரும்  பாடு மீன்களின் சமர்  மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா வித்தியாலய மைதானத்தில்  நடைபெற்றது.

முதல் நாள் இன்னின் போட்டியில்  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடியதில் அனைத்து விக்கட்டுக்களும் இழந்த நிலையில்  113 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு மத்திய கல்லூரி 9 விக்கட்டுக்களை இழந்த நிலையில்  248   ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இரண்டாம் நாள் இன்னின்ங்சில் துடுப்பெடுத்தாடிய புனித மிக்கேல் கல்லூரி அனைத்து விக்கட்டுக்களும் இழந்த நிலையில்  137  ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பாடு மீன்களின் சமரில் வெற்றி பெறுவதற்கு மூன்று ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி முதல் பந்திலேயே நான்கு ஓட்டங்களை பெற்று 10 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று 2017 ஆண்டுக்கான பாடு மீன்களின் சமரில்  சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிகொண்டது.

07வது சம்பியன் கிண்ணத்தையும் மட்டக்களப்பு மத்திய கல்லூரியே பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

போட்டியின் இறுதி நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வெற்றிக்கேடயங்களை வழங்கிவைத்தார்.