தமக்கு நியாயமான தீர்வினை வழங்க பிரதமர் ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும்

சித்திரைப்புத்தாண்டுக்கு முன்பாக தமது கோரிக்கைக்கு நியாயமான தீர்வினை வழங்க ஜனாதிபதியும் பிரதமரும் முன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமக்கான தொழில் நியமனத்தை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக 48வது நாளாகவும் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை நடாத்திவருகின்றனர்.

கிழக்கு மாகாணசபையும் மத்திய அரசாங்கமும் தமக்கான தொழில்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

48வது நாட்களை தமது போராட்டம் கடந்துள்ளபோதிலும் இதுவரையில் உறுதியான பதில்கள் எதுவும் வழங்கப்படாதது கவலையளிப்பதாகவுள்ளதாக பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நல்லாட்சி காலத்தில் மலரும் புத்தாண்டிலாவது தமது பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்போது கல்வி இராஜாங்க அமைச்சர் நுண்கலை பட்டதாரிகள் தொடர்பில் அண்மையில் தெரிவித்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த பட்டதாரிகள் இவ்வாறான கருத்துகளை அரசியல்வாதிகள் தெரிவித்து எங்களை நோகடிக்கவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டனர்.

கல்வி முறையில் மாற்றங்களை கொண்டுவராமல் பட்டங்களை வழங்கிவிட்டு அவற்றுக்கு முரணாக கருத்துகளை தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழர்களின் கலைகலாசாரங்களை பாதூக்கும் முக்கிய துறையாக நுண்கலை துறை காணப்படும் நிலையில் அவற்றினை ஒதுக்கும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள் கருத்துகளை வெளியிடுவதை தவிர்க்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.