Breaking News

பொதுமக்கள் டெங்குவை கட்டுப்படுத்த உதவவேண்டும்.இல்லையென்றால் பாரிய விளைவுகள் ஏற்படும் -கல்முனை வைத்திய நிபுணர் ரமேஸ் எச்சரிக்கை

கடந்த ஜனவரி முதல் மூன்று மாதங்களில் 500க்கு மேற்பட்ட டெங்கு நோயாளிகளுக்கு சிகிச்சைஅளித்து பராமரித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளோம். இருக்கின்ற ஊழியர்களைவைத்துக்கொண்டு உயரிய வைத்திய சேவையை வழங்கிவருகின்றோம். பொதுமக்கள் டெங்குத் தடுப்புச் செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்.இன்றேல் சமூகம் பாரிய தாக்கத்தினை சந்திக்கவேண்டிவரும் என கல்முனை ஆதாரவைத்தியசாலையின் விசேட பொது வைத்தியநிபுணர் வைத்தியகலாநிதி டாக்டர் இராமநாதன் ரமேஸ் தெரிவித்தார்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் காய்ச்சல் நோயாளிகள் அளவுக்கதிகமாக வெளிநோயாளர்பிரிவிற்கு தினமும் வருகை தருவதாகவும் அங்குள்ள விடுதிகள் நோயாளர்களால் நிரம்பிவழிவதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

இது தொடர்பில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் விசேட பொதுவைத்திய நிபுணர் டாக்டர் இரா.ரமேஸை தொடர்புகொண்டு கேட்டபோது பின்வருமாறு தெரிவித்தார்.

அதிகரித்துவரும் காய்ச்சல் நோயாளிகளால் வைத்தியசாலையில் தினமும் அனுமதி கூடிக்கொண்டுவருகின்றது. கடந்த காலங்களில் டெங்குநோயால் பீடிக்கப்பட்ட காரணத்தினால் 500க்கு மேற்பட்டவர்களால் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
டெங்கு அல்ல:வைரஸ்காய்ச்சல்!

ஆனால் அண்மைக்காலமாக டெங்குவிற்கு அப்பால் ஒருவித வைரஸ் காய்ச்சல் மிகவேகமாகப் பரவிவருகின்றது. வைரஸ் காய்ச்சல் நோயாளிகளை மிகவும் அவதானமாக இருமணிநேரத்திற்கொருதடவை அவதானிக்கவேண்டியுள்ளது. சிகிச்சையைளிக்கவேண்டும்.

மக்கள் என்ன காய்ச்சல் வந்தாலும் டெங்கு காய்ச்சல் என்றுதான் நினைக்கிறார்கள்.அப்படியல்ல தற்போது பல்வேறு வகையான காய்ச்சல்கள் உலாவருகின்றன.

வசதி தேவை!

அனுமதிக்கின்ற நோயாளிகளை போதுமானளவு பராமரிக்க போதிய ஊழியர்கள் குறைவு எனலாம். தாதிய உத்தியோகத்தர்களுக்கு மிகைநேரம் வழங்கப்பட்டு அவர்களது சேவை பெறப்படுகின்றது.

ஒவ்வொரு காய்ச்சல் நோயாளிகளையும் தொடர்ந்து அவதானிப்பதாகஇருந்தால் இந்த வார்ட்டுக்குமட்டும் குறைந்தது 20பேர் தேவை.அது சாத்தியமா? இங்குள்ள வைத்தியர்கள் தாதியஉத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவருவதன் காரணமாக நிலைமையைச் சமாளிக்கமுடிகின்றது.
எனினும் இருக்கின்ற வளங்களை வைத்துக்கொண்டு முடிந்தளவு தரமான வைத்தியசேவைகளை உச்சளவில் செய்துவருகின்றோம்.இவ்விடுதி பழையகாலத்துவிடுதி. இங்கு வைத்தியர்அறை இல்லாதிருந்தது. தாதியஉத்தியோகத்தர்களது இளைப்பாறும் அறையையே இவ்வாறு மாற்றியிருக்கின்றோம்.இன்னும் அபிவிருத்தி செய்யப்படவேண்டியுள்ளது.

என்1எச்1 இதுவரை இல்லை!

ஆனால் இதுவரை என்1எச்1 என்ற வைரஸ்நோயாளி எவரும் இங்கு இனங்காணப்படவில்லை. டெங்குவைத்தவிர வைரஸ்இன்புளுவன்சா என்1எச்1 நோய்க்கான பரிசோதனைசெய்ய இங்கு வசதி இல்லை. கொழும்பிற்குத்தான் அனுப்பவேண்டும்.

டெங்குவின் உச்சக்கட்டத்தில் 3 விளைவுகளை ஏற்படுத்துகின்றது. மூளையில் இரத்தக்கசிவு ஈரல் செயலிழத்தல் மூளை அழற்சி என்பனவாகும். இவற்றை மணிக்கொருதடவை அவதானிக்கவேண்டியுள்ளது.
ஈரல் செயலிழத்தல் மூளை அழற்சி என்பவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வீதம் இரத்தக்கசிவில் இல்லை.எனவே மிகவும் கவனமாகச் செயற்பட்டுவருகின்றோம்.
மக்கள் ஈடுபடவேண்டும்!

காய்ச்சல் ஏற்பட்டவுடன் வைத்தியசாலைக்கு ஓடிவருகின்றார்கள். அது தேவை.மக்கள் பயபீதியுடன்உள்ளனர். அந்தளவிற்கு காய்ச்சலின் கொடுரம் வாட்டுகின்றது. வருகின்ற அனைவரையும் வார்ட்டுக்களில்வைத்துப் பராமரிக்கமுடியாது.

டெங்கு வந்தபிற்பாடு தூக்கி அலைவதை விடுத்து வரமுன் காக்கவேண்டும். காலநிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுகின்றது.அடிக்கடி மழை பொழிகிறது. அது டெங்குவிற்கு சாதகமான நிலை. ஆகவே பொதுமக்களும் குறைந்தது தினமொன்றுக்கு அரை மணிநேரமாவது எமது வீட்டையும் சூழலையும் துப்பரவுசெய்யவேண்டும்.
எனவே பொதுமக்கள் வழிப்பாயிருந்தால் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கலாம். என்றார்.
No comments