கல்குடா மதுபானசாலையை மூடுமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்படும் மதுபானசாலையை அகற்ற நடவடிக்கையெடுக்குமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குல்குடாவில் அமைக்கப்படும் மதுபான உற்பத்தி சாலையை தடுத்து நிறுத்து என்ற வாசக மகுடத்துடன் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசே எமது எதிர்கால சந்ததியினரை சீரழிக்காதே,இனமதபேதமின்றி மதுவினை ஒழித்து சமூகத்தினை காப்போம்,அரசே எமது சூழலை சீரழிக்காதே,போதைப்பொருள் இல்லாத இலங்கை இதுவா நீ சொன்னது,சிறுவர்களும் பெண்களும் அச்சமின்றி வாழ அரசே உதவி செய் போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மட்டக்களப்பு அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் இணையமும் ஆதரவு தெரிவித்து அதன் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து பேரணியாக சென்று மட்;டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பில் நல்லாட்சி மக்களுக்கான தேசிய முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"கல்குடா பிரதேசத்தில் அமைக்கப்படுகின்ற மதுபான உற்பத்தித் தொழிற்சாலை இப்பிரதேசத்தில் வாழ்கின்ற தழிம், முஸ்லிம் சமூகங்களின் வாழ்வியலில் வேண்டத்தகாத மாற்றங்களை உண்டு பண்ணுவது மட்டுமின்றி ஒட்டுமொத்த கிழக்கு மாகாண மக்களின் வாழ்க்கையிலும் சமூக, பொருளாதார ரீதியான  சீரழிவுகளை உண்டு பண்ணும்.

ஏற்கனவே மதுபானத்திற்கு அடிமையான கூடுதல் எண்ணிக்கையுள்ளவர்களைக் கொண்ட மாவட்டமென்ற அவப்பெயரைத் தாங்கிக் கொண்டிருக்கின்ற எமது மாவட்டம் இன்னுமின்னும் சீரழிய இத் தொழிற்சாலை வழிவகுக்கும்.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் கிழக்கு மாகாண மக்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் வேண்டுமென பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற இச்சுசூழலில் இவ்வாறான நடவடிக்கைகள் எமது எதிர்கால சந்ததியினரை திட்டமிட்டு நெறிபுரளச் செய்து அழித்து விடுவதற்காகவென்றே செய்யப்படுகின்றனவா என்ற கேள்வியும் எழுகின்றது.

நல்லாட்சிக் கோசத்தோடு ஆட்சிபீடமேறிய அரசின் பூரண அனுசரணையோடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அறியப்படுகின்ற இத்தொழிற்சாலை எமது வாக்குகளையே பெற்று ஆட்சிபீடமேறி எம்மையே  ஏமாற்றுகின்ற ஒரு முயற்சியா என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

இவ்வாறான சமுகத் தீமையொன்றுக்கெதிராக எமது எதிர்ப்பை அரசிற்குக் காட்டுவற்காக எமது இயக்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதே இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாகும்.