மட்டக்களப்பில் அமைக்கப்படுகின்ற கால்நடை உற்பத்தித் தொழிற்சாலை இனம் தெரியாத விசமிகளால் சேதம்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிராமத்தில் World Friends International (Pvt) Ltd  என்ற தனியார் கம்பனியினால் சுமார் 20 மில்லியன் ரூபா செலவில் மக்கள் வங்கியின் நிதி உதவியினால் நிர்மானிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற கால்நடை உற்பத்தித் தொழிற்சாலை (கோழிப் பண்ணை) கடந்த 15.04.2017ம் திகதி இரவு இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.


மின் மானி மின் விளக்குகள் மற்றும் சுற்று வேலி என்பன இத்தாக்குதலினால் சேதமாக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.கங்காதரன் காத்தான்குடி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதனைத் தொடர்ந்து குற்றவாழிகளைக் கண்டுபிடிப்பதற்காக பொலிசார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே மேற்குறித்த நாசகார வேலையினால் குறித்த பண்ணையின் கட்டுமானப் பணிகளை தொடர்வதா அல்லது இல்லையா? என்ற நிலையில் கம்பனி தள்ளப்பட்டுள்ளதால் புதுக்குடியிருப்பு கிராமத்தில் உள்ள ஆலய பரிபாலன சபை குறித்த பிரதேசத்தின் கிராமசேவையாளர் மற்றும் கிராமத்தில் உள்ள முக்கிய சமூகசேவை அமைப்புகளிடம் பண்ணையின் பாதுகாப்பு தொடர்பாக உதவி கோரப்பட்டுள்ளதாகவும் வறுமையில் முன்னிலை வகிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில்  ஒருசில முயற்சியாளர்களால் மாவட்ட அபிவிருத்தி கருதி அமைக்கப்படுகின்ற இவ்வாறான தொழிற்சாலைகளை இடைநடுவில் அழித்து தொடங்கவிடாமல் தடுப்பதானது மாவட்ட மக்களுக்கு மாத்திரமின்றி போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அனைவருக்கும் செய்கின்ற துரோகமான செயலாகும் எனவும் கங்காதரன் மேலும் தெரிவித்தார்.

குறித்த பண்ணையானது இக்கிராமத்தில் அமைக்கப்பட்டால் இங்குள்ள பலர் தொழில்வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதுடன் குறைந்த விலையில் கால்நடை உற்பத்திப் பொருட்களையும் இலகுவாகப் பெற்றுக்கொள்ளலாம்.

எனவே கடந்தகால உள்நாட்டு யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டினைக் கருத்தில் கொண்டு தொடங்கப்படுகின்ற இவ்வாறான தொழில் முயற்சிகளுக்கு குறித்த பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் தங்களது பூரணமான ஆதரவினை வழங்குவதுடன் குறித்த தொழிற்சாலைகளின் பாதுகாப்பிற்கும் முழுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பது அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டிய விடயமாகும்.