இலங்கையில் நாளொன்று 800 கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன –பிரதி கல்விப்பணிப்பாளர் புவிராஜ்

இலங்கையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் தொழில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்.புவிராஜ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பயனியர் வீதியில் உள்ள மதர்ஸ் கெயார் முன்பள்ளியின் வருடாந்த உடல் திறனாய்வுப்போட்டி இன்று மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி உள்ளக அரங்கில் நடைபெற்றது.

மதர்ஸ் கெயார் முன்பள்ளியின் தலைவர் டாக்டர் அமரசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்.புவிராஜ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மதர்ஸ் கெயார் முன்பள்ளியின் முகாமையாளர் திருமதி நீருஜா தேவதாசனின் ஏற்பாட்டில் இதன்போது பல்வேறு சிறுவர் விளையாட்டுக்கள் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இதன்போது சீறுவர்களின் உடற்பயிற்சி கண்காட்சியும் சிறப்பாக நடைபெற்றதுடன் பழைய மாணவர்கள்,பெற்றோருக்கான நிகழ்வுகளும் சிறப்பான முறையில் நடைபெற்றன.

ஆத்துடன் வெற்றிபெற்றவர்களுக்கு அதிதிகளினால் வெற்றிக்கேடயங்களும் பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதிக்கல்விப்பணிப்பாளர்,
முன்பிள்ளைப் பருவமானது பிள்ளையினுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற பருவமாக இருக்கின்றது. இந்தப் பருவத்தில் பிள்ளையில் 85தொடக்கம் 90வீதமான மூளை வளர்ச்சி ஏற்படுகின்றது. இந்தப் பருவத்தில் நாங்கள் பிள்ளைக்கு கொடுக்க வேண்டிய நல்ல விடயங்களை கொடுப்பதன் மூலம் அவர்கள் நல்ல விருத்தியை அடைய முடியும்.

இலங்கையில் 15 சதவீதமான பிள்ளைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள். இது சிறியதொரு தொகையல்ல. அதே போல் எமது நாட்டில் 15சதவீதமான பிள்ளைகள் நீரிழிவு நோய்க்கு ஆளாகியிருக்கின்றார்கள். அத்துடன் இலங்கையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
இது மிகவும் கவலைக்குரிய செய்தியாகும். 14சதவீதமான பிள்ளைகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எடுப்பதற்கு முன்னரே பாடசாலைகளிலிருந்து இடைவிலகுகின்றார்கள். 13தொடக்கம் 15வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளில் 11சதவீதமான பிள்ளைகள் புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருக்கின்றார்கள். இவை சிறுவர்கள் தொடர்பாக சுகாதார அமைச்சு, சிறுவர் செயலகம் மற்றும் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட அண்மைக்கால தகவல்களாகும்.

இலங்கையில் திருமண வயதை எட்டியுள்ள பெண்களில் 6சதவீதமானவர்கள் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பம் தரிக்கின்றார்கள். நாளாந்தம் இலங்கையில் 800ற்கும் மேற்பட்ட கருக்கலைப்புகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தற்கொலையில் உலகத்தில் நான்காவது இடத்தில் இலங்கை இருக்கின்றது. மது பாவனையில் மட்டக்களப்பு முன்னிலையில் இருக்கின்றது. இவ்வாறானதொரு சமூகத்தில்தான் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இவ்வாறானதொரு சமூகத்தை உருவாக்கியது யார் என்ற கேள்வி உங்கள் அனைவர் மத்தியிலும் இருக்கும். வேறுயாருமல்ல நாங்கள் எல்லோரும் சேர்ந்துதான் இவ்வாறானதொரு சமூகத்தை உருவாக்கியிருக்கின்றோம்.

முன்பள்ளிப் பருவ பிள்ளைகளின் வளர்ச்சியில் நீங்கள் மிக அக்கறையாக இருக்க வேண்டும். இப்பருவத்தில் பிள்ளைகள் எழுத வேண்டும் வாசிக்க வேண்டும் என்கின்ற விடயத்தி;தான் பெற்றோர்கள் மிகவும் கவனம் செலுத்திக்கொண்டிருக்கின்றார்கள். இதனால் பிள்ளைகளின் வளர்ச்சிக்குத் தேவையான ஏனைய விடயங்கள் அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதனால்தான் இன்று நாங்கள் இவ்வாறானதொரு சமூகத்தை எதிர்கொண்டிருக்கின்றோம். ஆகவே பிள்ளைகள் சந்தோசமாக இருப்பதற்கு என்னென்னமுயற்சிகளை நீங்கள் எடுக்கவேண்டுமோ அவற்றை எடுக்க தவறாதீர்கள்.

உலகிலேயே பிள்ளைகள் மிகவும் சந்தோஷமாக இருக்கின்ற நாடு பின்லாந்தாகும். அதற்குக் காரணம் அங்கிருக்கின்ற கல்வி முறையாகும். பின்லாந்து நாட்டின் கல்வி முறையில் பல விடயங்கள் பிள்ளைகளுக்காகவே உள்வாங்கப்பட்டிருக்கின்றன. ஏழு வயதிற்குப் பின்னரே ஒரு பிள்ளை பாடசாலைக்குச் செல்லும். அங்கிருக்கின்ற அனைத்தும் அரசாங்கப் பாடசாலைகளாகும். தனியார் வகுப்புக் கலாசாரம் அங்கு கிடையாது. பாடசாலைக் கல்வி மாத்திரம் தான் அங்கு இருக்கின்றது. வீட்டுவேலைகள்கூட பிள்ளைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. அதனால்தான் அங்கு பிள்ளைகள் சந்தோஷமாக இருக்கின்றார்கள்.