மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகளுக்கு அழைப்பு…..

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை ஒரு மாதத்தினை பூர்த்திசெய்யவுள்ள நிலையில் அன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் அனைவரையும் காந்தி பூங்கா வருகைதருமாறு மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மாதம் 22ஆம் திகதி மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் தமது சத்தியாக்கிரக போராட்டத்தினை காந்தி பூங்கா முன்பாக ஆரம்பித்த நிலையில் இன்று திங்கட்கிழமை 28 நாட்களையும் கடந்து சத்தியாக்கிரக போராட்டம் நடைபெற்றுவருகின்றது.

மத்திய மாகாண அரசாங்கங்கள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்;டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இரவு பகலாக நடைபெற்றுவரும் இந்த போராட்டம் தொடர்பில் அரசியல்வாதிகளும் அரசாங்கமும் கிழக்கு மாகாணசபையும் உரிய நடவடிக்கைகளை இதுவரையில் எடுக்கவில்லையென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு அபாயம் நிலவிவருவதாகவும் வேலையற்ற பட்டதாரிகள் இரவு வேளைகளில் கடுமையான நுளம்புக்கடிக்கும் மத்தியில் போராட்டத்தினை நடாத்திவருவதாகவும் எவருக்காவது ஏதாவது நேருமானால் அதற்கான முழுப்பொறுப்பினையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார்.
30நாட்களை நெருங்கியுள்ள நிலையிலும் மத்திய மாகாண அரசாங்களினால் ஆக்கபூர்வமான பதில்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

கடந்த 14ஆம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதரின் ஆலோசகருடன் சந்திப்பினை மேற்கொண்டிருந்த நிலையில் நியமனங்களை வழங்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் இதுவரையில் அது தொடர்பிலான தீர்க்கமான பதில்களும் வழங்கப்படவில்லை.இதனை ஒரு வெறும் கண்துடைப்பாகவே கருதுவதாகவும் அவர் வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார்.

எதிர்வரும் புதன்கிழமை எங்கள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 30வது தினம் நிறைவடைகின்றது.அன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு நாங்கள் அழைப்பு விடுகின்றோம்.

அன்றைய தினம் சத்தியாக்கிரக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அனைத்து அரசியல்வாதிகளும் வருகைதந்து எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு என்னன்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் எங்களுக்கு தெளிவுபடுத்தப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.