இளைஞர்களே உங்கள் முகப்புத்தகங்களைஆக்க பூர்வமான தீர்வு தொடர்பான விடயங்களை பரிமாறிக்கொள்ள பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

(சசி துறையூர்) 

இன்று உள்ள நிலைமையை நாங்கள் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் முரண் பாடுகளை பூதாகரமாக்ககூடாது எனவும் தீர்வு தொடர்பாக நாங்கள் என்ன செய்ய வேண்டுமென நீங்கள் சிந்திகின்றீர்களா?என இளைஞர்களிடம் கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் கெளரவ கி.துரைராசசிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மண்முனை மேற்கு பிரதேச இளைஞர்கழக சம்மேளனத்தின் புனரமைப்பு பொதுக்கூட்டமும் இளைஞர் கெளரவிப்பு நிகழ்வும் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி தலைமையில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதேசத்தின் இளைஞர் அபிவிருத்தி நடவடிக்கைகளில் முன்னோடியாக செய்ற்ப்பட்ட இளைஞர் யுவதிகளை பாராட்டி பரிசில்களை வழங்கி வைத்து கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் கெளரவ கி.துரைராசசிங்கம் அவர்கள் ஆற்றிய உரையின் முழுவிபரம்.

வழக்கமாக யார் யாருக்கெலாம் அறிவுரைகள் தேவைப்படுகிறதோ அவர்களுக்கெல்லாம் அறிவுரை கசக்கும்.  இது யதார்த்தம். ஆனால் சிலருக்கு இனிக்கும்,  இனித்தால் அது போதும்.

முழு இந்தியாவையும் மாற்றியமைக்க 100 இளைஞர்கள் இருந்தால் போதும் என்றார் சுவாமி விவேகனந்தர். அவ்வாறு முழுமையும் தேவையில்லை அந்த முழுமையில் சிறிய பகுதி போதும் அந்த சிறிய பகுதி ஆளுமை உள்ளது, அக்கறையுள்ளது, ஈடுபாடுள்ளது இவ்வாறு ஒரு சக்தி ஒன்று இருக்கின்ற பொழுது அதனை ஆக்கத்திற்க்காக பயன்படுத்திட முடியும்.

இந்த நாட்டினுடைய வரலாறு தொடர்ச்சியான  துன்பியலாகத்தான் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அதிலே நுணுக்கமாக பார்ப்போமானால் இந்த துன்பியலினுடைய ஆரம்பம்  இளைஞர்களினுடைய வகிபாகத்தை அதிகம் கொண்டிருக்கிறது.

  ஆம் இளைஞர்கள் இந்த நாட்டில் சரியான முறையில் வழிகாட்டவோ நெறிப்படுத்தப்படவேயில்லை என்ற உண்மையை கண்டூகொள்லாம் அதனை மறுக்கவும் மறைக்கவும் முடியாது.

தென்பகுதியில் எழுபதுகளில் படித்த வேலையற்றிருந்த இளைஞர்கள் வேறுவழியில்லாமல் புரட்சி செய்ய முற்பட்டார்கள்.

  அரசைமாற்றுவதன் மூலம் தமது அபிலாஷைகளை அடைந்து கொள்ளமுடியுமென நம்பினார்கள் கனவுகண்டார்கள்.

 கியுபாவின் புரட்சிநாயகன் சேகுவராவை இலட்சியநாயகனாக முன்னிறுத்தி அவருடைய கொள்கையை பின் பற்றி ஆயுதங்கள் மூலம் ஆட்சியை புரட்டி மாணவர்களின் ஆட்சியை ஏற்படுத்திட அவர்கள் முனைந்தார்கள். அந்த புரட்சியையும் அதனுடைய விளைவுகளையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்,

அந்த துன்பியலான புரட்சியை தொடர்ந்துதான் அப்போதிருந்த அரசு இது தொடர்பாக ஆராய நியமித்த ஆணைக்குழு சமர்ப்பித்த சிபார்சுகளின் எண்ணக்கருவில் இளைஞர்களை ஏதோ ஒரு விதத்தில் இயங்கு குழுக்கலாக , செயற்பாட்டாளர்களாக வைத்திருக்க வேண்டும் அதற்க்கான வாய்ப்புக்கள் உருவாக்கி கொடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணக்கருவில் உதயமானதுதான் தேசிய இளைஞர்சேவைகள் மன்றம்.

இருந்த போதிலும் என்றுமே திருந்தமாட்டோம் என்று அடம்பிடித்த அரசியல் சிந்தனையுடையவர்களினால் தெற்குக்கு மட்டுமே அதன்செயற்பாடுகள் குவிந்தது வடகிழக்கை நோக்கி நகரவில்லை.

இதன் காரணமாகவும் 1972 மற்றும்1977 களில் இந்த நாட்டினுடைய அரசியல் தலைமைகளுக்கு வினோதமான யோசனை தோன்றியது,  அதுதான் பல்கலைக்கழக நுளைவுக்கான  தரப்படுத்தல் அதனால் வடகிழக்கில் அதிகூடிய உச்ச புள்ளிகளை பெறும் மாணவர்களே குறிப்பாக தமிழ் இளைஞர்கள் பல்கலைக்கழகம் செல்ல முடியும் என்ற நெருக்கடி நிலை ஏற்பட்டது.

 பல்கலைக்கழகம் பலகாரக்கடையா? இளைஞர்கள் கேள்வி கேட்கலாயினர் அவர்கள் வேறுவிதமாக சிந்தித்தார்கள் செயற்பட்டார்கள் காலம் அவர்களை நிர்ப்பந்தித்தது. அதன் விளைவைத்தான் இந்த முழுநாடும் முப்பது வருடங்களுக்கு மேலாக அனுபவிக்க வேண்டியதாயிற்று, நீங்களும் நானும் அதனை நன்கறிவோம்.

இங்கும் இளைஞர்கள் சரியாக பயன்படுத்தப்படவில்லை. இதனுடைய ஆரம்ப கலத்தில் ஜெகன் குட்டிமணி போன்றோர் கைது செய்யப்பட்டு உயர்நிதிமன்றில் நிறுத்தப்பட்டனர்.

நீதிமன்ற தீர்ப்பின் போது உயர்நீதிமன்ற நீதியரசர் தீர்ப்பு வழங்குகின்ற போது இந்த வழக்கு முழுமையையும் நான் பார்த்த போது நீங்கள் சிறப்பாக செயற்பட்டவர்கள் உங்களுடைய ஆளுமை ஆற்றல் சரியான முறையில் வழிப்படுத்தப்படவில்லை, பயன்படுத்தப்படவில்லை. பயன்படுத்தப்பட்டிருந்தால் இந்த நாட்டுக்கு அது பெரும் சொத்தாக இருந்திருக்கும். அவ்வாறு நடைபெறாமையிட்டு நான் கவலையடைகிறேன்.

ஆனாலும் நீதிபதி என்ற ரீதியில் நான் தீர்ப்பு வழங்கவேண்டியுள்ளது என அவர் தனது தீர்ப்பை வழங்க வேண்டியதாயிற்று.

ஆக இங்கும் இளைஞர்கள் சரியான பாதையில் நெறிப்படுத்தப்படவில்லை அதனால் நாட்டினுடைய சொத்துக்கள் வளங்கள் சீரளிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இவ்வாறான கசப்பான காலங்களையெல்லாம்  தாண்டி
இன்றைய சந்ததிகளானா நீங்கள் வந்திருக்கின்றீர்கள்.

இன்று இந்த நாட்டில் காணப்படுகின்ற நிலைமையை அடிப்படையாக கொண்டு நான் உங்களிடம் தயவாக கேட்பது ஏனென்றால் நீங்கள் தான் நாளை உந்த உலகையே ஆளப்போகுன்றவர்கள்.

இந்த நிலைமையில் இருந்து நாம் சிறந்த அடுத்த கட்ட நிலைக்கு போக வேண்டும், சுவடுகளை பதிக்கவேண்டும்.


அதற்க்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் என நீங்கள் சிந்தித்திட வேண்டும் ,செயற்படவேண்டும்.

இது தொடர்பாக வாசிக்ககூடியவர்கள் வரலாறுகளின் கடைசி பக்கங்களை அதாவது இறுதி அத்தியாயத்தை வாசியுங்கள் ஏனென்றால் முன்பக்கம் புரட்சியாக இருக்கும் அதன் பின்பக்கம் தான் தீர்வுப்பக்கமாக படிப்பினைகளை தருகின்ற பக்கமாக இருக்கும்.


தீர்வை எய்துகின்ற போது எதிர் கொள்கின்ற இடர்பாடுகள் அவற்றுக்கு முகம் கொடுக்கப்பட்ட மாதிரிகள் என்பவற்றை அறிந்துகொள்வதுதான் இப்போது தேவையான மிக முக்கியமான விடயம்.


இவ்வாறு முரண்பாட்டுக்கான தீர்வு கண்டறிதல்,  தீர்வு நோக்கி எத்தனை பேர் சிந்திக்கின்றீர்கள்??

இளைஞர்களே  இன்று முகப்புத்தகங்கள் செய்தித்தாள்கள் பார்க்கின்ற போது முரண்பாடுகளை எல்லாம் தூக்கிப்பிடித்து பூதகரமாக்கி இன்னும் அதனை கூர்மையாக்குகின்ற முயற்சிகள்தான் நடைற்றுக்கொண்டிருக்கின்றன.

எனவே உங்கள் முகப்புத்தகங்களை தீர்வு தொடர்பான விடயங்களை பரிமாறிக்கொள்ள ஆக்கபூர்வமாக பயன்படுத்துங்கள்.

தென்னாபிரிக்காவின் நெல்சன் மண்டேலா, இந்திய அஹிம்சை போராளி காந்தியின் சரித்திரங்களின் கடைசிப்பக்கங்களை நான் பலதடவை மீண்டும் மீண்டும் வாசித்திருக்கிறேன் நீங்களும் வாசியுங்கள்

அதைவிட்டு பிரச்சனைகளை பூதகரமாக்கி நாம் படுகுழிக்குள் விழப்போகுன்றோமா? என்பதனை நீங்கள் சிந்திக்க வேண்டும்.

ஏனென்றால் இப்போது தேவை, நீங்கள் சிந்திக்க வேண்டும் வெறுமனே பிரச்சினைகளை பரிமாறிக்கொள்வதன் மூலம் நாம் ஒரு போதும் அதனிலிருந்து விடுபட முடியாது. மீண்டும் படுகுழிக்குள்தான் தள்ளப்படுவோம்.

எச்சரிக்கையாக கவனமாக இருக்வேண்டும் செயற்பட வேண்டு. இளைஞர்களே உழைக்கின்ற சக்தி சிந்திக்கின்ற ஆற்றல் புதியவற்றை ஏற்றுக்கொள்கின்ற பக்குவத்திலே நீங்கள் இருப்பவர்கள்.

நீங்கள் தேடவேண்டியது பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது தீர்வு தொடர்பாகத்தான். ஏன் நீங்கள் அவ்வாறு சிந்திக்க முடியாது? சிந்தியுங்கள் அதுதான் உங்களுக்கும் இந்தநாட்டின் சந்ததிக்கும் பிரயோசனமாக இருக்கும்.

தீர்வுக்கான சந்தர்ப்பங்கள் எத்தனை வாய்த்தன அத்தனை சந்தர்ப்பங்களும் தகர்க்கப்பட்டன. யாரால்? ஏன்? எதற்க்காக? சிந்தித்திட வேண்டும்.

இப்போது தமிழர்களுடைய தலைவிதி எழுதப்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கு நான் உட்பட உங்கள் அபிமானத்துக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் இன்னும் பலர் ஒரு விதமாக சிந்திக்க, ஒரு சிலர் வேறு விதமாக சிந்திக்கின்றார்கர் செயற்படுகிறார்கள்.

இவற்றில் எது பொருத்தமானது வெற்றியளிக்கும் , எது தேவையானது என நீங்கள் சிந்திக்க வேண்டும்.

இந்த நிகழ்வில் நான் பங்குபற்றி உங்களோடு கருத்து பரிமாறிக்கொள்ள வாய்ப்புகிடைத்தமையிட்டு ஏற்பாட்டு குழுவுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.