வேலையற்ற பட்டதாரிகளின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் 1000தந்தி அனுப்பும் போராட்டம்

எதிர்கட்சி தலைவர் சம்பந்தர் ஐயா நினைத்தால் நாளைக்கே எமது பிரச்சினையை தீர்க்கமுடியும்.எமது நிலைமை தொடர்பில் உரியவர்களிடம் கொண்டு சென்று தீர்வினை வழங்கமுடியும்.ஆனால் ஏன் அவர் மௌனமாகவே உள்ளார் என்பது எங்களுக்கு புதிராகவுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்குமாறு கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஆயிரம் தந்திகளை அனுப்பும் போராட்டம் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான நியமனங்களை வழங்க மத்திய,மாகாண அரசாங்கங்களை வலியுறுத்தி கடந்த 30 நாட்களாக மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த போராட்டம் 30வது நாளை கொண்டுள்ள இன்று புதன்கிழமை தமது போராட்டம் தொடர்பில் இதுவரையில் மத்திய மாகாண அரசாங்கங்கள் நடவடிக்கையெடுக்காமை தொடர்பில் அதற்கான அழுத்தங்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்கங்கள் வழங்காமையை கண்டித்தும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து காந்தி பூங்காவில் இருந்து மட்டக்களப்பு பிரதான தபால் நிலையம் வரையில் வேலையற்ற பட்டதாரி மாணவர்களின் பேரணி நடைபெற்றதுடன் பேரணியை தொடர்ந்து தபாலகத்தில் இருந்து பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு தந்தி அனுப்பும் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பில் வீதியில் போராடும் அனைத்து பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலையை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று எழுதப்பட்ட தந்தி 1000 ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் மேற்கொண்டுவரும் காலவரையறையற்ற சத்தியாக்கிரக போராட்டம் தொடர்பில் அரசாங்கங்கள் கவனத்தில் கொள்ளாமை கவலையளிப்பதாகவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார்.

கற்ற சமூகத்தின் மீது இந்த அரசாங்கம் காட்டிவரும் அலட்சியப்போக்குக்கு அவர்கள் பதில் வழங்கியே ஆகவேண்டும் என்ற அடிப்படையில் தமது போராட்டம் தொடர்ச்சியாக முன்கொண்டுசெல்லப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
வடகிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் பட்டதாரிகள் வீதிகளில் போராட்டங்களை நடாத்திவரும் நிலையில் அவர்களை பாராமுகமாகவே அரசாங்கம் இருந்துவருவதாகவும் கிஷாந்த் தெரிவித்தார்.

எமது போராட்டம் தொடர்பில் விரைவான நடவடிக்கையெடுக்கப்படாவிட்டால் எமது போராட்ட வடிவத்தினை மாற்றிபோராடவேண்டிய நிலையேற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எமது பிரச்சினைகள் தெரிந்தாலும் கூட அவர்கள் எமது போராட்டம் தொடர்பில் கவனத்தில் கொள்வார்கள் என்ற நோக்குடன்தான் இந்த தந்தி போராட்டத்தினை 30வது தினம் நடாத்துவதாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இதன் பின்னரும் எமக்கு சாதகமான முடிவுகள் வழங்கப்படா விட்டால் போராட்டங்கள் வடிவம் மாறலாம்.அது எங்களுக்கு பாதகமாக இருந்தாலும் எமது போராட்டம் தொடரும்.

பாராளுமன்றம் செல்கின்றார்கள் எங்களைப்பற்றி கதைக்கின்றார்கள் இல்லை.எங்களது வாக்குகளைப்பெற்று பாராளுமன்றம் செல்லும் இவர்கள் எங்கள் தொடர்பில் கருத்தில்கொள்வதில்லை.

குப்பைகளில் வீசப்பட்ட குப்பைகளாக நாங்கள் உள்ளோம்.குப்பையென வீசப்பட்டுள்ள இந்த இளைஞர் சமூதாயத்தின் பலம் அவர்களுக்கு விளங்குவதில்லை.இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு முதுகெழும்பாக இருப்பவர்கள் வீதியில் வீசப்பட்டுள்ளார்கள் எனவும் இங்கு கலந்துகொண்ட பட்டதாரிகள் தெரிவித்தனர்.

எதிர்கட்சி தலைவர் சம்பந்தர் ஐயா நினைத்தால் நாளைக்கே எமது பிரச்சினையை தீர்க்கமுடியும்.எமது நிலைமை தொடர்பில் உரியவர்களிடம் கொண்டு சென்று தீர்வினை வழங்கமுடியும்.ஆனால் ஏன் அவர் மௌனமாகவே உள்ளார் என்பது எங்களுக்கு புதிராகவுள்ளது.

இங்குள்ள அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களிடம் நல்லபெயர் வாங்குவதற்கா எமது பிரச்சினை தொடர்பில் கரிசனையற்றுள்ளார்கள் என்ற சந்தேகம் எழுவதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.