வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் கிழக்கு முதலமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள்  தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.

 அலரி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் கிழக்கு மாகாண பட்டதாரிகள் மற்றும் கிழக்கின் ஆளணி வெற்றிடங்கள் என  பல விடயங்கள்  தொடர்பில் ஆராயப்பட்டன.

அத்துடன் இதன் போது  கிழக்கு  மாகாண பட்டதாரிகளின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் துயர நிலை தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதமருக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

கிழக்கு  மாகாண பட்டதாரிகளின்  கோரிக்கைகள் அடங்கிய மகஜரை முதலமைச்சர் பிரதமரிடம் நேரில் கையளித்ததுடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களை தற்போதுள்ள பட்டதாரிகளைக் கொண்டு நியமித்து விட்டு ஏனையோரை பயிற்சி அடிப்படையில் உள்வாங்குவது தொடர்பில் இதன் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்திக் கூறப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகளின் முழுமையான தரவுகள் ,விடயதானங்கள்  மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச வெற்றிடங்கள் ஆகியவற்றை முழு அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிழக்கு முதலமைச்சருக்கு பணிப்புரை விடுத்தார்,

இது தொடர்பான அறிக்கையை நாளைய தினத்திற்குள் (01.03.2017) பிரதமரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

இந்தப் பிரச்சினையை ஒரு தீவிரமான பிரச்சினையாகக் கருதி இந்த வாரத்திற்குள் ஒரு சாதகமான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சரிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பான விடயங்கள் குறித்து முதலமைச்சருடன் தொடர்பு கொள்வதற்கு  பிரதமர் அலுவலகத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரியொருவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கடந்த எட்டு நாட்களாக வெயில் மழை பாராது  போராட்டங்களை முன்னெடுத்து வரும் கிழக்கு மாகாண பட்டதாரிகளை வாக்குறுதிகளுடன் சந்திப்பதை விடுத்து சாதகமாக தீர்வொன்றுடனே நேரில் சந்திப்பதாக உறுதி பூண்டிருந்த கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஒரு கட்டமாகவே இன்று பிரதமரை சந்தித்திருந்தார்,

இதனடிப்படையில் ஒரு வாரத்திற்குள் கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு சாதகமான தீர்வினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அது மாத்திரமன்றி கிழக்கில் அரச முதலீடுகளின் ஊடான புதிய தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் தொடர்பான யோசனையொன்றும் கிழக்கு முதலமைச்சரினால் இதன் போது பிரதமரிடம் முன்வைக்கப்பட்டது.

முதலமைச்சரின் யோசனைகளை பாராட்டிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிழக்கில் அரச முதலீடுகளை ஏற்படுத்தி தொழில்வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பான யோசனைகளை விரைவில் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.