மட்டக்களப்பு மாவட்டசெயலகத்தில் பொலிஸாருக்கும் பட்டதாரிகளுக்கும் இடையே முறுகல் நிலை(வீடியோ இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு பேரணியாக சென்ற வேலையற்ற பட்டதாரிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலையேற்பட்டதால் அங்கு பதற்ற நிலை நிலவியது.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கடந்த எட்டு தினங்களாக மத்திய மாகாண அரசாங்கங்கள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சவப்பெட்டியை வைத்து ஆர்ப்பாட்டத்தினை நடாத்திய வேலையற்ற பட்டதாரிகள் அதனை சுமந்தவாறு காந்தி பூங்காவில் இருந்து பேரணியாக பிரதான பஸ் நிலையம் ஊடாக மைக்கல் கல்லூரி,சிசிலியா பெண்கள் பாடசாலை,மத்திய கல்லூரி ஊடாக மட்டக்கள்பு மாவட்ட செயலகம் வரையில் பேரணி சென்றது.

மாவட்ட செயலகத்திற்குள் சென்ற பட்டதாரிகள் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து தமதுகோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளிப்பதற்காக காத்திருந்தபோதும் அரசாங்க அதிபர் வருகைதராத காரணத்தினால் தமது பட்ட சான்றிதழின் நகலை கிழித்து எரிக்க முற்பட்டபோது அதனை பொலிஸார் தடுக்கமுற்பட்டவேளையில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாம் ஏற்பட்டது.

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன்,மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்கர் கீர்த்திரட்ன ஆகியோர் பட்டதாரிகளுடன் கலந்துரையாடி இயல்புநிலையை ஏற்படுத்தினர்.

இதன்போது ஒன்றிணைந்த பட்டதாரிகளின் சங்க தேசிய இணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் சிறுகாயங்களுக்குள்ளானதாக பட்டதாரிகள் தெரிவித்தனர்.